×

தென் ஆப்ரிக்காவுடன் மகளிர் கிரிக்கெட் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி

வதோதரா: தென் ஆப்ரிக்க மகளிர் கிரிக்கெட் அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ரிலையன்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த தென் ஆப்ரிக்கா 45.1 ஓவரில் 164 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. வுல்வார்ட் 39, கேப்டன் சுனே லுவஸ் 22, மரிஸன்னே காப் 54 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். இந்திய பந்துவீச்சில் ஜுலன் கோஸ்வாமி 3, ஷிகா பாண்டே, ஏக்தா பிஷ்ட், பூனம் யாதவ் தலா 2, தீப்தி 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அறிமுக வீராங்கனை பிரியா பூனியா, ஜெமிமா ரோட்ரிகியூசுடன் இணைந்து துரத்தலை தொடங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 20.4 ஓவரில் 83 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தது.

ஜெமிமா 55 ரன் (65 பந்து, 7 பவுண்டரி), பூனம் ராவுத் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 41.4 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 165 ரன் எடுத்து வென்றது. பிரியா பூனியா 75 ரன் (124 பந்து, 8 பவுண்டரி), கேப்டன் மித்தாலி ராஜ் 11 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். முதல் போட்டியிலேயே சிறந்த வீராங்கனை விருதை தட்டிச் சென்றார் பிரியா பூனியா.  இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது ஒருநாள் போட்டி வதோதராவில் நாளை காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.

Tags : match ,India ,ODI ,South Africa , Women's ,Cricket, South Africa, India,ODI
× RELATED மைதான் இந்தி விமர்சனம்