×

சொத்துக்காக 6 பேர் கொலை கைதான கேரள இளம்பெண்ணுக்கு மேலும் பல கொலையில் தொடர்பு? : 5 பேரை கொலை செய்ய முயன்றதாக குற்றச்சாட்டு

திருவனந்தபுரம் : கேரளாவில்  சொத்துக்காக கணவர் உள்பட 6 பேரை கொலை செய்த இளம் பெண்ணுக்கு மேலும் சில கொலைகளில் தொடர்பு இருக்கலாம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேரளாவின் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியைச் சேர்ந்தவர் ராய் தாமஸ். இவரது  மனைவி ஜோளி. கடந்த 2002-2016ம் காலக்கட்டத்தில் ஜோளியின் கணவர் ராய்தாமஸ், மாமனார் டோம் தாமஸ், மாமியார் அன்னம்மா உள்பட 6 பேர் மர்மமாக இறந்தனர். பின்னர் சொத்துக்கள் ஜோளியின் பெயருக்கு மாற்றப்பட்டிருந்தது. இதற்கிடையே, ராய்தாமசின் அண்ணன் ரோஜோ, தந்தையின் உயில் மற்றும் குடும்பத்தினர் 6 பேரின் சாவில்  சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்தார். தொடர்ந்து 6 பேர் உடல்களையும் போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். விசாரணையில் 6 பேரையும் ஜோளி, சயனைடு கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ஜோளியை கைது செய்தனர். அவருக்கு சயனைடு வாங்கி கொடுத்த  உறவினர் மேத்யூ, நகை தொழிலாளி பிரஜூகுமாரும் கைது செய்யப்பட்டனர்.  

ஜோளி, கோழிக்கோடு என்ஐடியில்  பேராசிரியையாக பணிபுரிந்து வருவதாகக் கூறி வந்துள்ளார். ஜோளி கைதாகும் வரை உறவினர்கள் இவர் என்ஐடி பேராசிரியை  என்றே  நம்பியுள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்த கோழிக்கோடு என்ஐடி பதிவாளர் பங்கஜாக்‌ஷன், 2000ம் ஆண்டு முதல் எல்லா ஆவணங்களையும் பரிசோதித்து விட்டோம். ஜோளி என்ஐடியில் தற்காலிக ஊழியராக கூட பணியாற்றவில்லை என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே மேலும் 2 கொலைகளில் ஜோளிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜோளியின் மாமனார் டோம் தாமசிற்கு 2 தம்பிகள் உள்ளனர். இவர்களில் ஒருவருக்கு சுனீஷ், வேறு ஒருவருக்கு வின்சென்ட் என்ற மகன்கள் இருந்தனர். கடந்த 2002ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி அன்னம்மா இறந்த மறுநாள் வின்சென்ட் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். 2008 ஜனவரி 17ம் தேதி டோம் தாமசின் இரண்டாது தம்பி டொமினிக்கின் மகன் சுனீஷ் பைக் விபத்தில் இறந்தார். இந்நிலையில் சுனீஷின் தாயார் எல்சம்மா கூறியதாவது:

வின்சென்டிற்கும் சுனீஷிற்கும் ஜோளியுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. அன்னம்மா இறந்த மறுநாள் வின்சென்ட் தற்கொலை செய்தார். அப்போது கட்டிலில் முழங்கால் போட்ட நிலையில் உடல் இருந்தது. இதனால் எங்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. 2008ல் புலிக்கயம் என்ற இடத்தில் வைத்து சாலை விபத்தில் சுனீஷ் இறந்தான். இந்த இரண்டு மரணத்திலும் ஜோளிக்கு தொடர்பு இருக்கலாம் என்று இப்போது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று கூறினார். போலீசாரின் விசாரணையில் ஜோளிக்கு பல ஆண்களுடன்  தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. பலமுறை  இவர் கருக்கலைப்பு செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

6 பேர் கொலை சம்பவம் சினிமாவாகிறது

பிரபல சினிமா தயாரிப்பாளர்  ஆன்டனி பெரும்பாவூர் கூறியதாவது: நடிகர்  மோகன்லாலை வைத்து  குற்றப்புலனாய்வு தொடர்பான ஒரு கதையை சினிமாவாக  தயாரிக்க திட்டமிட்டிருந்தேன். தற்போது கூடத்தாயி பகுதியில் சொத்துக்காக 6  பேரை  ெகான்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த  கதையை தற்போது  மோகன்லாலை வைத்து படமாக எடுக்க தீர்மானித்துள்ளோம். இதில்  மோகன்லால்,  கொலைகள் குறித்து விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரியாக வருவார்.  அடுத்த  ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த சினிமாவுக்கான படப்பிடிப்பு  தொடங்கும்.

மேலும் 5 பேரை கொல்ல திட்டம்

கோழிக்கோடு எஸ்பி சைமன் கூறியதாவது: ஜோளி மேலும் பலரை   கொல்ல திட்டமிட்டுள்ளார். விசாரணையில், தனக்கு பெண்களை பிடிக்காது   என்று கூறி உள்ளார். இதனால்தான் மாமியார் அன்னம்மா,  2வது கணவர் ஷாஜூவின்   மனைவி சிலி, அவரது மகள் ஆல்பைன் ஆகியோரை கொலை  செய்துள்ளார். இதே போல்   உறவினர்களான மேலும் 5 பெண்களையும் கொலை  செய்ய முயற்சித்துள்ளார்.   இவர்களின் வீடுகளுக்கு ஜோளி அடிக்கடி  சென்றுவருவாராம். கேரளாவை  உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள்  அடுத்தடுத்து அவிழ்க்கப்பட்டு விடும்.

மார்க்சிஸ்ட் பிரமுகருக்கு தொடர்பு

ஜோளிக்கு  தாமரைச்சேரி பகுதியை சேர்ந்த சிபிஎம் செயலாளர் மனோஜ், ஒரு தாசில்தார்  ஆகியோர் போலி உயில் தயாரிக்க உதவி செய்துள்ள தகவல் வெளியாகி  உள்ளது. குடும்பத்துக்கு  வெளியே உள்ளவர்களையும் ேஜாளி விஷம் வைத்து கொன்றிருக்கலாம் என்ற சந்தேகம்  எழுந்துள்ளது. ராய்தாமசின் உறவினர்  பிளம்பர் பிச்சுண்ணி கடந்த 2 ஆண்டுக்கு முன்பு  திடீரென இறந்தார். ராய்தாமஸ்  மரணத்தில்  சந்தேகம் இருக்கிறது என்று  பிச்சுண்ணியும் போலீசில் புகார் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல் சாத்தமங்கலம் பகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ராமகிருஷ்ணன்  என்பவரது மரணத்தில்  ஜோளிக்கு தொடர்பு இருக்கலாம் என்று அவரது மகன் ரோஹித், மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளார்.

ஜோதிடர் தலைமறைவு

ஜோளியின் சொந்த ஊரான இடுக்கி மாவட்டம் கட்டப்பனையை சேர்ந்த ஒரு ஜோதிடரை ேஜாளி அடிக்கடி சந்தித்து வந்துள்ளார். அவர் கொடுத்த பொடியை ஜோளி, ராய் தாமசிற்கும் சிலிக்கும் சாப்பிட கொடுத்ததாக ஜோளி போலீசில் தெரிவித்துள்ளார். ஜோளியின் முதல் கணவர் ராய் தாமசின் கையில் ஒரு தகடு காணப்பட்டது. அந்த தகடையும் அந்த ஜோதிடர்தான் கொடுத்துள்ளார். தகடு மூலம் விஷம் உடலுக்குள் செல்ல வாய்ப்புள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோதிடர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.


Tags : teenager ,Kerala ,murder , Kerala teenager, arrested, murdering six people
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...