ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கிறார் புதுகை எஸ்பியை இடமாற்றம் செய்யுங்கள் : அமித் ஷாவுக்கு பாஜ நிர்வாகி பரபரப்பு கடிதம்

இலுப்பூர்: புதுக்கோட்டை  மாவட்டம் இலுப்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் கடந்த 8ம் தேதி பேரணி மற்றும்  பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இலுப்பூர் பிடாரி கோயில் அருகில்  இருந்து பேரணி புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக  சென்று சின்னகடைவீதியில்  பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் பேரணி  மற்றும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் இலுப்பூர்  காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் போலீஸ்  தரப்பில் ஊர்வலம்  செல்லும் பாதை மிக நெரிசலாக இருப்பதால் அதில் சில இடங்களை மாற்றியும்,  சிவன் கோயில் தெப்பக்குளம் அருகே பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி  அளிக்கப்பட்டது.  இந்நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த  பாஜ  இளைஞரணி நிர்வாக உறுப்பினர்,  பாண்டியராஜ், எஸ்பியை இடமாற்றம்  செய்யக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதம் தற்போது சமூக வலைதளங்களில்  வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

அந்த கடிதத்தில் பாண்டியராஜ்  குறிப்பிட்டிருப்பதாவது: எஸ்பி செல்வராஜ் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்.   அரசியல் காரணங்களுக்காகவும், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்காகவும் அவர்  இதுபோல் செயல்படுகிறார். கடந்த  முறையும் இதுபோல் அவர் அனுமதி வழங்கவில்லை.  எனவே எஸ்பியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இது  அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம்  குறித்து புதுக்கோட்டை எஸ்பி  செல்வராஜ் ஒரு செய்திக்குறிப்பு  வெளியிட்டுள்ளார். அதில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் விஜயதசமியை முன்னிட்டு  ஊர்வலம் மற்றும் பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கோரி மனு  அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பரிசீலனை செய்து சில விளக்கங்கள் கேட்டு  நிகழ்ச்சி அமைப்பாளருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டது. அவர்கள் அளித்த  மனுவின் அடிப்படையில் பரிசீலித்து சிறிய மாறுதலுடன் ஊர்வலத்திற்கும், பொது  நிகழ்ச்சி  நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை  ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஏற்க மறுத்து அவர்களாகவே நடத்த இருந்த ஊர்வலம்  மற்றும் பொது நிகழ்ச்சியை ரத்து செய்து உள்ளதாக தெரிய வருகிறது. போலீசார்  அனுமதியளித்த  தகவலை மறைத்து வேண்டும் என்றே ஒருசிலர் சமூக ஊடகங்களில்  போலீசார் அனுமதி மறுத்து விட்டதாக பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தெரிய  வருகிறது. இவ்வாறு அதில்  கூறியுள்ளார்.

Tags : RSS ,executive ,Amit Shah ,Baja ,SP , RSS event, Pudukkai S P, Amit Shah, BJP executive
× RELATED அனுமதியின்றி தங்கியுள்ள வௌிநாட்டு தொழிலாளர்கள்