×

அதிமுக பேனர் விழுந்து பலியான விவகாரம்,..1 கோடி நஷ்டஈடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை வழக்கு : ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் தமிழக அரசு தனக்கு 1 கோடி நஷ்டஈடு தருமாறு உத்தரவிடக்கோரி சுபஸ்ரீயின் தந்தை உயர் நீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்துள்ளார். சென்னை குரோம்பேட்டை, பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (23). துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  இவர், செப்டம்பர் 12ம் தேதி மதியம் 3 மணி  அளவில் வேலை முடித்து ஸ்கூட்டியில் வீட்டிற்கு புறப்பட்டார்.  குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.  பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகரான காஞ்சி கிழக்கு மாவட்ட எம்ஜிஆர்  மன்ற இணை செயலாளர் ஜெயகோபால் மகன் திருமண பேனர் பல கிமீ தூரத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களை வரவேற்று வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.

ரேடியல் சாலையில் ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீரென சரிந்து சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்தார். அப்போது  கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. இதில் உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் சுப இறந்தார்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், சட்டவிரோத பேனர்கள் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன்,  சேஷசாயி ஆகியோர் சட்டவிரோத பேனர்களை வைத்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அதை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது ஏன் துறைரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தனர். பின்னர்  தற்காலிக நிவாரணமாக சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்சம் தரவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நீதிபதிகளிடம், சுபஸ்ரீயின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரண நிதி தரப்பட்டுள்ளது என்றும் சட்டவிரோத பேனர்கள் வைக்க அனுமதி அளித்த விவகாரம்  தொடர்பாக 2 அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் பேனர் வைத்த ஜெயகோபால் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி தனது மகள்  மரணத்திற்கு நஷ்டஈடாக 1 கோடியை தமிழக அரசு தருமாறு உத்தவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனது மகள் மரணத்துக்கு அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம் என்றும் சட்டவிரோத  பேனர்களுக்கு அனுமதி அளித்ததிலும், அந்த பேனர்களை அகற்றாமல் இருந்ததிலும் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் கடமையை செய்யவில்லை.

எனவே, மகளின் மரணத்திற்கு நஷ்டஈடாக தமிழக அரசு 1 கோடி தருமாறு உத்தரவிட வேண்டும். மேலும், மகள் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்துமாறு உத்தரவிட வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் தவறு  செய்தவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றுமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Subhashree ,victim ,AIADMK , AIADMK banner, sacrifice, compensation, Subasree, father, iCord
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...