×

பாஜ சார்பில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்த சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் விழிப்புணர்வு பிரசார வாகனம்

* இன்றும், நாளையும் வலம் வருகிறது
* நிர்வாகிகளுடன் பொன்.ராதாகிருஷ்ணன் ஆலோசனை

சென்னை: பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோருக்கு 32 இடங்களில் இந்திய, சீன கொடியை அசைத்து உற்சாக வரவேற்பு அளிப்பது என்று பாஜ ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்  ஆகியோர் நாளையும், நாளை மறுநாளும் அரசு முறை பயணமாக சென்னை அடுத்த மாமல்லபுரத்துக்கு வருகை தருகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், தமிழக பாஜ சார்பில் இரு நாட்டு  தலைவர்களின் சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தி.நகர் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பாஜ மாநில  பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநில துணைத்தலைவர் அரசக்குமார், சென்னை மாவட்ட பொறுப்பாளர் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், பிரதமர் மோடி, ஜின்பிங் ஆகியோருக்கு சாலை மார்க்கமாக 32 இடங்களில் எவ்வாறு பிரமாண்ட வரவேற்பு கொடுப்பது, இந்திய, சீன கொடியை அசைத்து அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது எப்படி என்பது போன்ற பல்வேறு  கருத்துகள் பேசப்பட்டன.  மேலும், 100 படகுகள் மூலம் கொட்டிவாக்கத்தில் இருந்து மாமல்லபுரத்துக்கு கடல் வழியாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது குறித்தும் முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக, கட்சிக்கு அப்பாற்பட்டு பொதுமக்களை  பிரமாண்ட வரவேற்பில் ஈடுபடுத்துவதை முக்கிய நோக்கமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பாஜ சார்பில் இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்காக 5 வாகனங்கள் பிரசாரக்குழு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரசார வாகனங்கள்  இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு குறித்த முழு தகவல்களை காட்சி மற்றும் ஒலி வாயிலாக எடுத்து கூற உள்ளனர். இந்த வாகனங்கள் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் வலம் வர உள்ளது  என்று பாஜ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,Tiruvallur ,country leaders ,Kanchi ,Bajaj ,Awareness Campaign , Baja, two country leaders, Chennai, Kanchi and Tiruvallur
× RELATED சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு...