சுத்தமல்லியில் மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை களவாடி தனது வீட்டில் கட்டிபோட்டவர்

பேட்டை: மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை களவாடி தனது வீட்டில் கட்டு போட்டு விட்டு சொந்தம் கொண்டாடினார் ஒருவர். அந்த மாடு பால்காரர் மூலம் மீட்கப்பட்டதோடு போலீஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் சுத்தமல்லியில்   பரபரப்பை ஏற்படுத்தியது.நெல்லை மாவட்டம் பேட்டை அடுத்துள்ள சுத்தமல்லி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ரமேஷ்(49)-ராணி(44) தம்பதியினர். இவர்களுக்கு 10ம் வகுப்பு படிக்கும் சாம்(15) என்ற மகனும் 8ம் வகுப்பு படிக்கும் ரம்யா(13) என்ற மகளும் உள்ளனர்.  ரமேஷ் கோவையில் உள்ள டூவீலர் விற்பனை நிலையத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். மூத்தமகன் சாம் முக்கூடலில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியிருந்து படிக்கிறார். இதனால் ராணி தனது மகள் ரம்யாவுடன் ஊரில்  வசித்து வருகிறார். அதோடு வருமானத்திற்காக 5 பசு மாடுகள் வளர்த்து வந்தார்.

இவர்கள் வீட்டு மாடுகளில் சுத்தமல்லியைச் சேர்ந்த அப்துல் மாலிக் என்பவர் பால் கறந்து கொடுப்பதோடு அவரே விலைக்கு எடுத்துச் சென்றுவிடுவார். இதுபோல் நேற்று காலை மாடுகளில் பால் கறந்த பின் அவற்றை மேய்ச்சலுக்கு வெளியில்  அனுப்பி விட்டனர். அப்போது ஒரு பசு மாட்டை வஉசி நகரைச் சேர்ந்த ஒரு பெண் மறித்து அதை கயிற்றால் கட்டி பக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு ஓட்டிச்சென்றார். அந்த நேரம் பார்த்து ராணி வீட்டிற்கு பால் கறந்து கொடுக்கும் அப்துல்மாலிக்  அங்கு வரவே, அவர் ராணி வீட்டு மாட்டை பார்த்துவிட்டு, இது அவர்கள் மாடு ஆச்சே... இந்த பெண் ஏன் ஓட்டிச்செல்கிறார் என சந்தேகப்பட்டு கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், இது எங்கள் மாடுதான் வெளியில் மேய்ச்சலுக்கு சென்றதை  வீட்டிற்கு கொண்டு செல்கிறேன் என்றார்.

ஆனாலும் பால்காரருக்கு சந்தேகம், உடனே ராணி வீட்டிற்கு சென்று, உங்கள் மாடுகள் எல்லாம் மேய்ச்சலுக்கு போய்விட்டு வந்துவிட்டதா? என கேட்டுள்ளார். ராணியும், வந்து விட்டது ஒரு கர்ப்பிணி மாட்டை மட்டும் காணவில்லை.  அதைத்தான் தேடி வருகிறேன் என்றார். உங்கள் மாட்டை ஒரு பெண் அவர்கள் வீட்டில் கட்டி போட்டுள்ளார். வாங்க போய் பார்ப்போம் என்று பால்காரர் ராணியை கையோடு அந்த வீட்டிற்கு அழைத்துச்சென்றார். ராணியை பார்த்ததும் அவரது  கத்தியது. உடனே ராணி அந்த பெண்ணிடம், எங்கள் மாட்டை நீ எப்படி இங்கு கொண்டு வந்து கட்டிப்போடலாம் என அதட்டினார். அதற்கு அந்த பெண் சரியாக பதில் சொல்லாமல், அதுவும் எங்கள் மாட்டுடன் வந்துவிட்டது என்று சப்பை கட்டு  கட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து ராணி தனது மாட்டை அவிழ்த்துக்கொண்டு பால்காரருடன் சுத்தமல்லி போலீஸ் நிலையம் புறப்பட்டார். மாடும் அவர்கள் பின்னால் வந்தது. போலீஸ் நிலையம் சென்றதும் இதுகுறித்து அவர் புகார் தெரிவித்தார்.

 அதற்கு  போலீசார், அதுதான் உங்கள் மாடு கிடைத்து விட்டதே பிறகென்ன அதை ஏன் பெரிதுபடுத்துகிறீர்கள் என தட்டிக்கழித்துள்ளனர். ஆனால் ராணியும், பால்காரரும் விடவில்லை. அது எப்படிசார் ஒரு பொம்பள மாட்டை திருடிக்கொண்டு போய்  வீட்டில் கட்டி போட்டுள்ளார். அவர் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் சும்மா விடமாட்டோம். போலீஸ் நிலையத்தை முற்றுகையிடுவோம் என ஆவேசப்பட்டனர். அதற்கு போலீசார் இன்ஸ்பெக்டர் நாங்குநேரி தேர்தல்  பணிக்காக சென்றுள்ளார். நாளை(இன்று) வந்து விடுவார். அதன்பிறகு வாருங்கள். இப்போது மாட்டை நீங்கள் வீட்டிற்கு ஓட்டிச்செல்லுங்கள் என்றனர். அப்போது நேரம் மாலையாகிவிட்டதால் அந்த மாட்டில் போலீஸ் நிலையத்தில் வைத்தே பால்  கறந்தனர். அதன்பிறகு ராணி தனது வீட்டிற்கு ஓட்டிச்சென்றார்.

இதுபோல் சில மாதங்களுக்கு முன்  கொண்டாநகரம் பிள்ளையார் கோயில் தெருவைச்சேர்ந்த ஒருவரது  ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றபோது அதே பகுதியைச்சேர்ந்த மட்டன் கடைக்காரர் ஒருவர் தனது வீட்டிற்கு கடத்திச் சென்றிருந்தார். அதை  மிகவும் போராடி அதன் சொந்தக்காரர் மீட்டார். இதுபற்றி அவர் சுத்தமல்லி போலீசில் புகார் செய்தும் அவர்கள் ஆரம்பத்தில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மட்டன் கடைக்காரரை கூப்பிட்டு விசாரித்ததில் அவர் சந்தையில் வாங்கியது என அடம்பிடித்தார். அந்த பிரச்னை  முடிவுக்கு வராத நிலையில் திடீரென்று ஒரு நாள் அந்த மட்டன் கடைக்காரர் திருட்டு ஆட்டை விற்றபோது கையும் களவுமாக சிக்கினார். எந்த போலீசார் மட்டன் கடைக்காரரை அவரை காப்பாற்ற முயன்றார்களோ அவர்களே அவரை கைது  செய்யும் நிலை வந்தது. அப்போது அந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போன்றுதான் இப்போது மீண்டும் மாடு திருட்டுபோய் உள்ளது. இதில் போலீசார் நடிவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் பெரிய அளவில் போராட்டம்  நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Stories: