×

ஜூவன்ஜோ துறைமுகம் முதல் தஞ்சை வரை சோழருக்கும், சீனருக்கும் இடையில் பலமான உறவு: கல்வெட்டு, வரலாற்று ஆய்வுகளில் தகவல்

சென்னை: சீனாவின் ஜூவன்ஜோ துறைமுகம் முதல், தஞ்சை பெரிய கோயில் வரை சோழருக்கும், சீனருக்கும் இடையில் பலமான உறவு இருந்துள்ளதை கல்வெட்டுகளிலும், வரலாற்று ஆய்வுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் ஓர் இனமாக தமிழர்கள் அறியப்பட்டாலும், வரலாற்று பின்னணியோடு வணிகம், கலாசாரம், பண்பாட்டு ரீதியில் பல்வேறு நாடுகளிலும் தங்களின் தடத்தை பதித்துள்ளனர். குறிப்பாக, சீனாவுக்கும்  தமிழர்களுக்குமான தொடர்பு என்பது வரலாற்றுக் காலத்திலேயே வணிக ரீதியாக இருந்துள்ளது. சீனாவின் ஜூவன்ஜோ துறைமுகம், முந்தைய கடல்வழி பட்டுப்பாதையின் துவக்கமாக இருந்தது.  கடல் பயணியர்களான மார்கோபோலோ (இத்தாலி), இபின் பதூதா (மொராக்கோ)  ஆகியோரின் ஆய்வுகளில் ஜூவன்ஜோ துறைமுகம், உலகிலேயே அதிக வர்த்தகம் நடைபெற்ற இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 சீனாவின் சொங் மற்றும் யுவான்  வம்ச ஆட்சியின் போதுதான், சீனர்களுடனான தமிழர்களின் வணிகம் தொடங்கி உள்ளது. குறிப்பாக, 7 மற்றும் 8ம் நூற்றாண்டுகளில், பல்லவ மன்னன் சீனாவுக்கு சென்று அங்கு மிகப்பெரும் வணிகனாக உலா வந்துள்ளார்.  
பின்னர், 9ம் நூற்றாண்டில் சீனாவுடன் வணிகம் சுணக்கம் ஏற்பட்டு, மீண்டும் 10ம் நூற்றாண்டின் பாதியில் சோழதேசத்து வணிகர்கள் மீண்டும் சீனர்களுடனான வணிகத்தைப் புதுப்பித்தனர். குறிப்பாக சோழ வம்சத்தின் ராஜராஜனின் அரசவை  உறுப்பினர்கள், 1015ம் ஆண்டு சீனாவைச் சென்றடைந்ததாக ‘சுங் ஷி’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.  சொங் வம்சத்தைச் சேர்ந்த ஜாவ் ஜு குவா என்பவரது எழுத்தாணி வரைந்த வரலாற்று ஓவியத்தின்படி, சோழ வம்சத்தில் ராஜராஜன் (1015), ராஜேந்திரன்-1 (1033), குலோத்துங்கன் (1077) ஆகியோர் ஆட்சியில் கற்றறிந்த 71 வணிகர்கள் சீனாவில்  வணிகம் செய்துள்ளனர். அத்துடன், அவர்களுக்கு 81 ஆயிரத்து 800 செம்பு நாணயங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டதாக ‘சு குவா’வின் தரவுகளில் கூறப்பட்டுள்ளது.

சீனாவிடம் இருந்து அதிக அளவிலான தங்கம், வெள்ளி, ஈயம், தகரம், நாணயங்கள் ஆகியன  பண்டமாற்று முறையில் கொண்டு வரப்பட்டன. இதனால் சீனாவில் இத்தகைய உலோகங்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதால், அவற்றுக்கு சீன  அரசாங்கம் தடை விதித்தது. பின்னர் காகிதப் பணத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட உலோகங்கள் சோழ வீதிகளில் புழங்கப்பட்டன. சோழர்கள் சீனர்களுடன் வணிகம் செய்ததற்கு அழியாச் சான்றாக இருக்கும்  ஜுவன்ஜோவில் உள்ள கையுவான் புத்த கோவிலின் ஒருபகுதியில் பல இந்து கடவுள்களின் சிலைகளை காண முடிகிறது.  16 முகங்கள் கொண்ட 2 தூண்களின் 4  புறங்களிலும் இந்துக்களின் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. ஜுவன்ஜோ கடற்பயண அருங்காட்சியகத்தில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள பல இந்து கடவுள் சிலைகள் மற்றும் ஒப்பீட்டுப் படங்களுக்கு மத்தியில் வெளிர் மஞ்சள் நிற ஒளியில் தமிழ்  கல்வெட்டு ஒன்றுள்ளது.

அதில் பொறிக்கப்பட்டுள்ள எழுத்துகளைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம். ஆனால், அதன் பொருள் சீன மொழியில் விளக்கமாக தரப்பட்டுள்ளது. 1281ல் அக்கல்வெட்டு சீன அரசருக்குப் பரிசாக  அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தஞ்சை பிரகதீசுவரர் கோயிலின் விமானத்தில் 2வது தளத்தின் வடகிழக்கு மூளையில் செதுக்கப்பட்டுள்ள ஒரு சிலையானது மங்கோலியரின் உருவத்தை ஒத்துக் காணப்படுகிறது.  மீசை, குறுந்தாடி, சீன கழுத்துப் பட்டையுடன் கூடிய அரைக்கைச் சட்டை ஆகியவை இவர் மங்கோலியர் அல்லது சீனராக இருக்க வாய்ப்புண்டு என்று ‘அமராவதி’ ஆய்வு நூலில் கூறப்பட்டுள்ளது. ராஜராஜசோழன் நேரடிக் கண்காணிப்பில்  தஞ்சைக் கோயில் எழுப்பப்பட்டுள்ள நிலையில், அவருடைய ஒப்புதலின் பேரிலேயே இச்சிலை அங்கு நிறுவப்பட்டிருக்கும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது சோழருக்கும், சீனருக்கும் இடையேயான உறவுக்கு இது மிகச்சிறந்த   சான்றாக உள்ளது என்றால் மிகையல்ல...!

Tags : Chola ,Chinese ,Juvenjo ,Tanjore ,Juvenjo Port ,Tanjore: Inscription and Historical Information , Strong Relationship between Chola and Chinese from Juvenjo Port to Tanjore: Inscription and Historical Information
× RELATED நுளம்பர் பாணி நுணுக்கத்தூண்கள்