×

பேனர் விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி இழப்பீடு அரசு வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் தந்தை மனு தாக்கல்

சென்னை: சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுபஸ்ரீ கடந்த மாதம் 12ஆம் தேதியன்று, பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையின் மீடியனில் சட்டவிரோதமாக அதிமுக-வினர்  வைத்திருந்த பேனர் ஒன்று சுபஸ்ரீ மீது கவிழ்ந்து விழுந்தது. இதில் நிலைதடுமாறிய அவர் கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. ஏற்கெனவே சட்டவிரோதமாக பேனர்கள் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இருந்தும், சட்டவிரோதமாக பேனர் வைக்கப்பட்டு, இளம்  பெண் சுபஸ்ரீ பலியானதைத் தொடர்ந்து, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது.

இதற்கடையே, இளம்பெண் சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்கறிஞர் லட்சுமி நாராயணன், கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேசஷாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார். அப்போது, சட்டவிரோதமான பேனர்களைத் தடுக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தது. அதனை தமிழக அரசு நிறைவேற்றவில்லை. சுபஸ்ரீ என்ற பெண்மீது, சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த  பேனர் விழுந்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததில், லாரி மோதி உயிரிழந்தார்.

இதனால், அப்பெண்ணின் பெற்றோர் கடுமையான துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார். இதனையடுத்து, பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ  குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்ச ரூபாய் வழங்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், விதிமீறல் பேனர் விவகாரத்தில் கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. இந்த நிதியை  தமிழக அரசு வழங்கவேண்டும் என்றும் இதன் பின்னர் அதை அதிகாரிகளின் வருமானத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில், பேனர் விழுந்தால் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி  உயர்நீதிமன்றத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.

Tags : Subhashree ,accident ,Banerjee ,High Court , Father Subhashree dies in banner accident: Father files petition in High Court demanding Rs 1 crore compensation
× RELATED பாஜ தலைவர்களின் ஹெலிகாப்டர்களை...