×

கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் இறந்துள்ளது உண்மைதான்: தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல்

தஞ்சை: தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் கடந்த 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழந்தது உண்மை தான் என்று அதன் நிர்வாகமே ஒப்புக்கொண்டுள்ளது. தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவமனை டீன் குமுதா லிங்கராஜ் விரிவான விளக்கமளித்தார். இங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 3% பேர் மட்டுமே உயிரிழந்திருப்பதாகவும், மருத்துவ துறையில் இது இயல்பான எண்ணிக்கை தான் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். தகவல் அறியும் சட்டத்தின் கீழ் உயிரிழப்பு குறித்த புள்ளி விவரம் மட்டுமே கிடைக்கும் என்றும், அதன் மூலம் மருத்துவமனையின் தரத்தை தீர்மானிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியாகும் செய்திகளால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் குமுதா லிங்கராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வயலூர் கிராமத்திலிருந்து காலை 5 மணிக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட குழந்தை, உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலை 11 மணியளவில் இறுதி சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், குழந்தையின் உடலில் திடீரென அசைவு ஏற்பட்டதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அரை மணி நேரத்திற்கு முன்னரே குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். காலையில் அழைத்து வந்தபோதே குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியுமென பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியதில், இந்த மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும் 995 குழந்தைகள் உயிரிழந்துள்ள அதிர்ச்சித்தகவல் வெளிவந்தது. இந்த நிலையில், இவ்விகாரம் குறித்து அம்மருத்துவமனையின் டீன் விளக்கமளித்துள்ளார். தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி நாகை, திருவாரூர், அரியலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.Tags : children ,government hospital administration ,Thanjavur , Thanjavur, Government Hospital, Child Mortality, Dean
× RELATED பொள்ளாச்சியில் மாயமான குழந்தைகள் கோவையில் மீட்பு