மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்த்தி வழங்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இக்கூட்டம் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைசச்ர் பிரகாஷ் ஜவடேகர், கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த பல ஆண்களில் இல்லாத அளவு அதிக அகவிலைப்படி உயர்வாகும்.

இந்த அகவிலைப்படி உயர்வு, ஜூலை மாதத்தில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வை அமல்படுத்துவதன் மூலம், மத்திய அரசுக்கு கூடுதலாக 16,000 கோடி ரூபாய் செலவாகும். இது 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், சுமார் 65 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான தீபாவளி பரிசாகும். இதுதவிர கிராமப்புரங்களில் மருத்துவ சேவை செய்யும் ஆஷா தொழிலாளர்களின் சம்பளத்தை 1,000 ரூபாயில் இருந்து 2,000 ரூபாயாக, அதாவது இரு மடங்காக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் நடவடிக்கை பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மேலும், காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் 5300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமல்லாது, 2019 ஆகஸ்ட் 1ம் தேதிக்குப் பிறகு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ், நன்மைகள் பெற ஆதார் கட்டாயம் என்ற உத்தரவு நவம்பர் 30ம் தேதி வரை தளர்த்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது, என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories:

>