×

கால் நூற்றாண்டாக சிதிலமடைந்து கிடக்கும் கண்டனேரி கண்மாய்

*சீரமைக்கக்கோரி கலெக்டரிடம் மனு

விருதுநகர் : சிவகாசி ஒன்றியத்தில், கால் நூற்றாண்டாக சிதிலமடைந்துள்ள செவலூர் கண்டனேரி கண்மாயை, குடிமராமத்து திட்டத்தில் சீரமைக்க வேண்டும் என மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் கலெக்டருக்கு மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட செவலூர் கண்டனேரி கண்மாய் மூலம் செவலூர், புதுக்கோட்டை, கொத்தனேரி உள்பட 10 கிராமங்கள் நேரடியாக பயன்பெறுகின்றன. புதுக்கோட்டை, எரிச்சநத்தம், குமிழங்குளம், கொத்தனேரி கண்மாய்கள் நிறைந்து முழு கொள்ளளவை எட்டி, மறுகால் பாயும்போது வெளியேறி வரும் தண்ணீர் கண்டனேரி கண்மாயில் நிரம்பி, அதன்பின்னர், ஆனைக்குட்டம் அணைக்கு செல்கிறது. கண்டனேரி கண்மாய் மூலம் 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

இந்த கண்மாயை கால் நூற்றாண்டாக பராமரிக்காததால், கண்மாய் கலுங்குகள் மோசமான நிலையில் உள்ளது. சிறிய மழை பெய்தால் கூட தண்ணீரை சேமிக்க முடியவில்லை. தண்ணீர் மறுகால் பாயும் தடுப்பு பாலம்  முழுமையாக சேதமடைந்து தண்ணீர் கசிந்து வீணாகிறது. கண்மாய் முழு கொள்ளவை எட்டினால் மூன்று ஆண்டுகளுக்கு செவலூர், புதுக்கோட்டை, கொத்தனேரி, கவுண்டம்பட்டி, வெள்ளுர், குமாரபுரம், சித்தமநாயக்கன்பட்டி கிராம கிணறுகளின் நீர் மட்டம் உயர்ந்து நிற்கும். இதனால், அனைத்து ஊர்களிலும் போர்வெல்களிலும் நீர்மட்டம் உயரும்.

கண்மாயின் இரண்டு நீர்வரத்து கால்வாய்களும், சீமைக்கருவேல் மரங்களால் புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், தண்ணீர் வரும் வழிகள் தடைபட்டு கிடக்கிறது. எனவே, கண்மாய் நீர் வரத்து பாதை அடைப்புகளை உடனே நீக்கி, கலுங்குகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். மேலும், வரும் ஆண்டில் குடிமராத்து திட்டத்தில் கண்டனேரி கண்மாயை முழுமையாக சீர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

Tags : Kandaneri ,Virdhunagar kandaneri ,water pond , Water pond,Virdhunagar ,kandaneri Water pond,25 years
× RELATED அதிமுகவை ஏமாற்ற நினைத்தால்...