×

சிவகாசியில் பட்டாசு தயாரிப்பு பணிகள் தீவிரம்: இந்தாண்டு பட்டாசு விலை 10% உயர வாய்ப்பு என விற்பனையாளர்கள் தகவல்

சிவகாசி: அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். இதையொட்டி சிவகாசியில் உள்ள 900 பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு பட்டாசு விலை 10 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாட்டின் பட்டாசு தேவையை சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் 90 சதவிகிதத்தை பூர்த்தி செய்கின்றன. சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பட்டாசு தொழிலையே சார்ந்துள்ளனர். இதை தொடர்ந்து சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் பிரபலமாக விளங்குகின்றன.

இந்த ஆண்டு சிறுவர்களை கவரும் வகையில் புதுவிதமான பேன்சி  ரக பட்டாசுகள் சந்தைக்கு அதிகளவில் வரவுள்ளன. அவற்றை தயாரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து வழக்கமாக வெடிக்கப்படும் குருவி வெடி, லட்சுமி வெடி, சரம் மற்றும் இரவு நேரத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளும் தயாரிக்கப்படுகின்றன. தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடை வைப்போர் தற்போதே சிவகாசிக்கு படையெடுத்து வருகின்றனர். அங்கு குறைந்த விலையில் விதவிதமான பட்டாசுகளை அவர்கள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி வரி ஆகியவற்றால் பட்டாசு விலை கடந்த ஆண்டை காட்டிலும் இந்தாண்டு 10 சதவீதம் உயரும் என விற்பனையாளர்கள் கூறுகின்றனர். மேலும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படும் நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், முடிந்த அளவிற்கு குறைந்த அளவில் புகையை வெளியேற்றும் பட்டாசுகளை தேர்வு செய்து வெடிப்பது சுற்றுச்சூழலுக்கு நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Sellers ,Sivakasi , Sivakasi, crackers, intensity, fireworks prices, rising, vendors
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது