×

பழநி வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

பழநி : பழநி வனப்பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கால்நடைகள் மேய்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பழநி வனச்சரகம் 18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இங்கு ஏராளமான அளவில் யானைகள், சிறுத்தை, கரடி, மான், கேளையாடு, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்கள் அதிகளவில் வசித்து வருகின்றன. இவ்விலங்கினங்கள் அடிக்கடி உணவு மற்றும் குடிநீர் தேடி மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதனை தடுக்க வனத்துறையினர் அகழி அமைத்தல், சோலார் மின்வேலி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பயன் ஏதுமில்லை.

இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வெளியே வரும் சிறுத்தைகளால், கால்நடைகள் மற்றும் மனித உயிர்கள் பலியாகி வருகின்றன. பழநி வனப்குதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டம் அதிகளவு உள்ளது. பழநி-கொடைக்கானல் மலைப்பாதையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிறுத்தைப்புலியின் நடமாட்டத்தை பார்த்துள்ளனர். அதுபோல் பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகளை ஒட்டிய மலைக்கிராமங்களான தேக்கந்தோட்டம், ஆயக்குடி மற்றும் சட்டப்பாறை பகுதிகளில் சிறுத்தைப்புலி தாக்கி ஏராளமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது, வனப்பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் அதிகளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இவை பெரும்பாலும் வெளியே வருவதில்லை. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடைகளை மேய்க்க வனப்பகுதிக்குள் செல்வோரை தற்போது அனுமதிப்பதில்லை. தவிர, இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில், நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர, சிறுத்தை மற்றும் யானை போன்ற விலங்கினங்களின் நடவடிக்கைகளை கண்டறிந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளோம். விலங்குகளின் நடமாட்டம் குறித்து பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags : Palani Forest ,area , palani ,Forest Area,Leopard ,area
× RELATED இரவு நேரங்களில் அணை பகுதியில் தங்க...