×

ராஜஸ்தானில் விபரீதம்: தசராவை முன்னிட்டு துர்க்கை சிலையை கரைக்க சென்ற 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் துர்க்கை அம்மன் சிலையை ஆற்றில் கரைக்க சென்ற 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ராஜஸ்தானில் நவராத்திரி விழா கடந்த 9 நாட்களாக கொண்டாடப்பட்டது.  இதனை அடுத்து பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெற்றன.  இதற்காக திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்திருந்து அம்மனை வழிபட்டு சென்றனர். ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை கொண்டாட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. இதன் பின்னர் துர்க்கை அம்மன் சிலைகளை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. துர்க்கை சிலையை பார்வதி ஆற்றில் கரைப்பதற்காக நேற்றிரவு சிலர் ஊர்வலமாக எடுத்து சென்றனர். சிலையை கரைத்து கொண்டிருந்த போது ஒரு சிறுவன் குளிப்பதற்காக ஆற்றில் குதித்ததாகவும் அப்போது அவன் நீரில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.

இதை கண்ட சிலர் சிறுவனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் இறங்கிய போது அவர்களும் மூழ்கியதாக சொல்லப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த மாநில பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளூர் நீச்சல் வீரர்களுடன் சேர்ந்து நீரில் மூழ்கியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவில் மீட்பு பணி நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் காலையில் தொடங்கியது. சிறுவனையும் சேர்த்து மொத்தம் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும், அவர்களில் 7 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும் தோல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகேஷ் ஜெய்ஷ்வான் கூறியுள்ளார். மீதமுள்ள 3 பேரின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Rajasthan ,accident ,river ,idol ,drowning deaths , Rajasthan, Dasara, Turkish statue, six, 10 people, casualties
× RELATED ராஜஸ்தானில் பல்கலை. தேர்வுகள்...