×

அரசு ஆங்காங்கே நட்டுவந்தாலும் சூளைகளுக்காக தொடர்ந்து அழிக்கப்படும் பனை மரங்கள்

*கள் இறக்க அனுமதி வேண்டும்
* மரங்களை காக்க நடவடிக்கை தேவை


ஆர்.எஸ்.மங்கலம் : பரவலாக தமிழகம் முழுவதும் பனை விதைகள் நடப்பட்டு வந்தாலும், பனை மரங்கள் நாளுக்கு நாள் அழிந்து வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தின் கற்பக விருட்சம் என்று அழைக்கப்படுவது பனை மரமாகும். பனை மரம் ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை, சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி விருதுநகர் போன்ற பல மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய அனைத்து பொருள்களுமே மிகவும் பயனுள்ளது மட்டுமல்லாமல், மருத்துவக் குணம் வாய்ந்தவை. பதநீர் உடல் சூட்டை தணிப்பதற்கு மிகவும் உகந்தது. பதநீரில் இருந்து காய்ச்சி எடுக்கும் கருப்பட்டி, கற்கண்டு மிகவும் மருத்துவக் குணம் வாய்ந்தவையாகும்.

பனையில் இருந்து கிடைக்க கூடிய எந்த பொருளும் கழிவு இல்லை. அனைத்து பொருள்களுமே பயனுள்ளவை. அதில் முக்கியமாக பனை ஓலை பாய்முடைய, விசிறி தயார் செய்ய பயன்படுகிறது. ஓலை பாயில் படுத்து உறங்கினால் உடலுக்கு நல்லது. இதமான நல்ல தூக்கம் வரும். ஒலை விசிறி கோடை காலத்திற்கு மிகவும் சிறந்தது. இந்த விசிறி கொண்டு வீசினால் இதமான நல்ல இயற்கை காற்று கிடைக்கும், ஒலைகளில் வீடு கட்டி குடியிருந்தால் ஏசி தேவையில்லை. அவ்வளவு சுகாதாரமாக இருக்கும். நுங்கு, கோடை காலத்திற்கு மிகவும் உகந்தது. அதுபோல் பணங்காய், பணங் கிழங்கு என்று அத்தனையும் பயனுள்ளது.

பனைத் தொழில் நலிவுற்று போனதற்கு முக்கிய காரணம் அயல்நாட்டு மது விற்கும், உள்நாட்டில் தயாரிக்கும் மதுபான உரிமையாளர்களுக்கும் அரசுகள் காட்டி வரும் சலுகைகள் தான். சாராயம், பிராந்தி, விஸ்கி போன்ற பானங்களில் ஏற்படும் தீமை அதிகம். ஆனால் கள்ளு பானம் விற்க அரசு தடை விதித்துள்ளது. பதநீருக்கு சுண்ணாம்பு சேர்கணும். ஆனால் கள்ளு இயற்கையாக கிடைக்க கூடியது. இதில் பெரும்பாலும் தீமை இல்லை. ஒரு காலத்தில் மருத்துவர்களே பரிந்துரை செய்த பானம் கள்ளு.

மற்ற அயல்நாட்டு உள்நாட்டு தயாரிப்பு மது பானங்களில் இருக்கும் ஆல்கஹால் அளவை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் தான் அண்டை நாடுகளான இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் பதநீர், கள்ளு போன்ற பானங்களை பதப்படுத்தி விற்பனை செய்து வருகின்றனர். அங்குள்ள அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் அங்கு மது அருந்துபவர்களுக்கு பாதிப்பு இல்லை என்கின்றார்கள் விபரம் அறிந்தவர்கள். தற்போது ஊராட்சிகளில் நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் வைக்கின்றனர்.

இவை தண்ணீர் இல்லாமல் கருகி விட்டது ஆகையால் மழை காலங்களில் மரக்கன்றுகளை வைக்கலாம். அதற்கு பதிலாக கோடை காலங்களில் பனை மர விதைகளை சேகரித்து ஏரி, குளம், குட்டைகள் சாலை இரு ஓரங்களிலும் நட்டு பராமரித்தால் பனை மரம் தமிழகத்தில் அழிந்து போகாமல் இருக்கும். பனை மரத்திற்கு மற்ற மரங்களுக்கு போல அதிகமான தண்ணீர் தேவையில்லை. வறட்சியை தாங்கி வளரக் கூடிய தாவரம் மட்டுமல்லாமல், கண்மாய், குளம், ஏரி போன்றவற்றில் நடப்பட்டுள்ள பனை மரங்களால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.

அத்துடன் நீர்நிலைகளில் உள்ள நீர் ஆவியாகுவதையும் தடுப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசு மீதி எஞ்சியுள்ள பனை மரங்களையாவது காப்பாற்ற நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கஷ்டப்படும் குடும்பம்

பனை தொழிலாளி தர்மலிங்கம் கூறியது, எங்கள் தாத்தா, பாட்டன் காலம் தொட்டு பனைத் தொழில் செய்து வந்தோம். ஆனால் இப்போது அந்த தொழிலே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டோம். காரணம் போலீஸ் தொந்தரவு தான். பதநீர் இறக்கினாலும் வழக்கு போடுகின்றார்கள். கள்ளு இறக்கினாலும் விஷக் கள்ளு என்று வழக்கு போடுகிறார்கள். இதற்கு பயந்தே தொழிலை விட்டு விட்டேன். என்னை போன்று தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான பனைத் தொழிலாளர்கள் தொழிலை விட்டு விட்டு கஷ்டப்படுகிறோம். எங்கள் தொழில் அழிந்ததால் தான் பெரும்பாலான பனை மற்றும் தென்னை மரங்கள் அழிக்கப்படுகிறது. அரசு நாங்கள் கள்ளு இறக்கினால் தான் பொதுமக்கள் குடித்து கெட்டு போவார்கள் என்று நினைத்து டாஸ்மாக் கடைகளை ஊர்தோறும் திறந்துள்ளது.

நாங்கள் இந்த தொழில் செய்தால் எங்கள் குடும்பங்களும் கஷ்டப்படாது. மது குடிப்பவர்கள் குடும்பம் கஷ்டப்படாது. காரணம் தொழிலாளர்கள் வாங்கும் சம்பளத்தில் பதநீர், கள்ளு குடித்தால் சிறிதளவே செலவாகும். ஆனால் டாஸ்மாக் சென்றால் அதிகம் செலவாகும். அதிலும் கடை திறக்கும் முன்னரும், பின்னரும் மது வாங்கினால் கூடுதல் விலை கொடுத்து வாங்கி குடித்து விட்டு சிரமப்படுகின்றனர். எங்கள் வருங்கால சந்ததியினருக்கு இந்த தொழில் மறந்து போய் விடும் போல. ஆகையினால் எங்கள் தொழிலுக்கு அனுமதி அளித்து பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என்றார்.

Tags : state , Palm trees, rs mangalam,rameshwaram
× RELATED சூறைக்காற்றுடன் சுழன்றடித்தது கனமழை வாழை, தென்னை மரங்கள் நாசம்