×

பெங்களூரு பரப்பன அக்ஹார சிறையில் அதிரடி சோதனை நடத்திய குற்றப்பிரிவு போலீசார்: கைதிகளிடம் இருந்து செல்போன்கள், 37 கத்திகள் பறிமுதல்

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ஹார சிறையில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய அதிரடி சோதனை முடிவில் கைதிகளிடம் இருந்து செல்போன்கள், 37 கத்திகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை உள்ளது. 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2,200க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். பெண்களுக்கு தனியாகவும், ஆண்களுக்கு தனியாகவும் சிறை வளாகம் உள்ளது. இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் ரூபா அவர்கள் டிஐஜியாக இருந்தபோது, அங்கு போதைப்பொருள் புழக்கம் இருப்பதாவும், செல்போன் பயன்பாடு போன்ற பல்வேறு வசதிகளை கைதிகள் அனுபவித்து வருவதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இதையடுத்து, இந்த புகார்கள் மீது விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக்கு குழு அமைக்கப்பட்டது.

இந்த குழு நடத்திய விசாரணையில், பல்வேறு குற்றச்சாட்டுகள் உண்மை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அடிக்கடி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று அதிகாலை 5 மணியளவில் பெங்களூரு குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். பெங்களூரு மாநகர குற்றப்பிரிவு உதவி ஆணையர் சந்தீப் பாட்டீல் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையானது, சுமார் 6 மணி நேரம் வரை நீடித்தது. சிறை முழுவதும் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில், நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள், சிம்கார்டுகள், மதுபாட்டில்கள், 37 கத்திகள், கஞ்சா புகைக்கும் குழல்கள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தங்கிய அறைகளிலும் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்கா மகன் சுதாகரன் ஆகியோர் இந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : prisoners ,raid ,Bangalore , Bengaluru, Parappana Akhara Prison, Trial, Prisoners, Cell Phone, Knife
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...