‘பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மட்டம் வீக்’தரை தளத்தில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் உடைந்து சேதம்

திருச்சி : திருச்சி அரசு மருத்துவமனையில் தரை தளங்களில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் தினந்தோறும் உடைந்து சேதம் அடைந்து வருகிறது. இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ரூ.100 கோடி நிதி ஓதுக்கினார். இந்த மருத்துவமனையில் ரூ.55 கோடி செலவில் விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவின் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.

இந்த கட்டிடத்தை அப்போதைய முதல்வர் 2014ம் ஆண்டு வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். இந்த கட்டிடத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற தரைத்தளம் உள்பட 6 மேல் தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. தரைதளத்தில் முடநீக்கியல் பிரிவும், நுண்கதிர் பரிசோதனை பிரிவும் செயல்படுகிறது. முதல் தளத்தில் இருதய நோய் பிரிவும், இரண்டாவது தளத்தில் நரம்பியல் மற்றும் மூளை மருத்துவ பிரிவும், முன்றாவது தளத்தில் சிறுநீரக பிரிவும், 4வது தளத்தில் குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவும், 5வது தளத்தில் இரைப்பை மற்றும் குடல் நோய் பிரிவும், 6வது தளத்தில் புற்றுநோய் சிகிச்சை பிரிவும் இயங்கி வருகின்றன.

6வது தளத்திலும் துறைகள் சார்ந்த நோய்களுக்கு அறுவை சிகிச்சை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உயர் சிகிச்சைக்காக ரூ.45 கோடியில் நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 440 படுக்கைகள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது உள்ள மருத்துவர்களை விட கூடுதலாக டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த விபத்து மற்றும் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை பிரிவு செயல்பட தொடங்கியதும் அதி நவீன உயர்தர சிகிச்சைகள் நோயாளிகளுக்கு கூடுதலாக வழங்கப்படுகிறது.

கடந்த 5 ஆண்டுகளை ஒப்பிடும்போது நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. அனைவரும் நல்ல முறையில் சிகிச்சை பெற்று திரும்பி உள்ளனர். பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் பலர் உயர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அதிக அளவில் வருகின்றனர். இந்த கட்டிடத்தின் 6 தளங்களிலும் உள்ள தரை தளங்கள் முழுவதும் வெள்ளை நிறத்தில் இரண்டுக்கு இரண்டு அளவுள்ள டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அப்படி திருச்சி மருத்துவமனையில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் தரமற்றவை என்பதால் தினந்தோறும் உடைந்து சேதம் அடைந்து வருகிறது. குறிப்பாக நோயாளிகள் உடன் வருபவர்கள் தங்கி ஓய்வு எடுக்கும் பகுதிகள் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் உடைந்து சிமெண்ட் தரை தளம் போல் காட்சியளித்து வருகிறது.

திருச்சி அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் 6வது மாடி புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு, குடல் நோய் மருத்துவ பிரிவு, 2வது மாடியில் உள்ள நரம்பியல் மருத்துவம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் முன்புறம் நோயாளிகள், பொதுமக்கள் ஓய்வு எடுக்கும் பகுதியில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்து தினந்தோறும் ேசதம் அடைந்து வருகிறது. சில இடங்களில் டைல்ஸ் கற்களை இல்லாமல் சிமெண்ட் தரை தளமாக காணப்படுகிறது. இதனால் நோயாளிகள் உடன் வருவபவர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இரண்டாவது மாடி மற்றும் 6வது மாடி தரை தளத்தில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் தினந்தோறும் உடைந்து சிதறி சேதம் அடைந்து வருவதை சரி செய்ய வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்த போதிய பார்க்கிங் வசதிகள் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. மருத்துவமனையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் செல்போன் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் புகார் உள்ளது.

பொதுவாக மருத்துவமனையில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது சர்வ சாதாரணமாக தினந்தோறும் பிளாஸ்டிக் பைகள் இங்கு அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் டீன் சாரதா ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைத்திருந்தார். போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தற்போது பாதுகாப்பின்றி இருவழி பாதையாக பொதுமக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். எனவே அரசு மருத்துவமனையின் சேதமடைந்துள்ள தரைத்தளத்தை சீரமைத்து நோயாளிகளுக்கு ஏற்படும் ்இடையூறை போக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Basematch Week ,government hospital , trichy ,government hospital,Tiles ,broken
× RELATED மணப்பாறை அருகே மின் கசிவால் சோள தட்டைகள் எரிந்து நாசம்