×

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி தவித்த 51 பேர் பத்திரமாக மீட்பு

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி தவித்த 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். கோவை, மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணை உள்ளது. இந்த அணை நீரை ஆதாரமாக கொண்டு பவானி ஆறு ஓடுகிறது. ஆயுத பூஜை விடுமுறையை யொட்டி நேற்று தேக்கம்பட்டியில் உள்ள நீரேற்று நிலையம் அருகாமையில் உள்ள பவானி ஆற்றின் நடுவே சுமார் 51 சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது பவானி ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடிக்கொண்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளில் சிலர் ஆற்றில் குளித்து கொண்டு இருந்தனர்.அந்த சமயத்தில் பில்லூர் அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து பவானி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை தொடர்ந்து ஆற்றின் நடுவே இருந்த அனைவரும் உடனடியாக மேடான பகுதிக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த மேடான பகுதிக்கு இருபுறத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனை பார்த்த கரையில் இருந்தவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் இறங்கினர். பரிசல் இயக்குபவர்களின் உதவியுடன் முதலில் குழந்தைகள், பெண்கள் என சுமார் 34 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன் பிறகு எஞ்சியவர்கள் மீட்கப்பட்டனர். இரவானதாலும், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்காலும் மீட்பு பணிகளில் சற்று தோய்வு ஏற்பட்டது. இருப்பினும் 3 மணி நேரமாக நடந்த மீட்பு பணிகளில் 51 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Tags : persons ,floods ,Mettupalayam-Bhavani River ,Mettupalayam , Mettupalayam, Bhavani river, flood, 51 people, rescue
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...