×

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாளை முதல் நீக்கம்: ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நாளை முதல் நீக்க, ஆளுநர் சத்யபால் மாலிக் உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தும், மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தும் மத்திய அரசு இரண்டு மாதங்களுக்கு முன்பு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதனைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராணுவ பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது.

தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதுடன், முக்கிய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். மேலும் மாநிலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு அரசு நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. கடந்த இரண்டு மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் அமலில் இருந்த கட்டுப்பாடுகள் பெருமளவில் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பிய நிலையில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் சத்யபால் மாலிக் ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், ஆளுநரின் ஆலோசகர்கள், காவல்துறை மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் நாளை முழுமையாக நீக்கப்படுகின்றன. கடந்த இரண்டு மாதங்களாக வாடகை வாகன ஓட்டுனர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவித்து வந்தனர். இதனால் வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக வந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சுற்றுலாவையே நம்பிய பல சிறுதொழில்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களில் ஊடக செய்தியாளர்கள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டுமே ஜம்மு காஷ்மீருக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Jammu ,Kashmir ,Satyapal Malik , Jammu and Kashmir, tourists , Governor Satyapal Malik
× RELATED ஜம்மு-காஷ்மீரில் காவலர்களை...