×

இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட 2 தமிழர்கள் உட்பட 35 பேர் வேட்புமனு தாக்கல்

இலங்கை: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட 2 தமிழர்கள் உட்பட 35 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். இலங்கையில் அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் உள்ளது. 1978-ல் அதிபர் ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்டு முதல் அதிபராக ஜே.ஆர்.ஜெயவர்த்தன் 1982-ல் தேர்வு செய்யப்பட்டார். அதிபரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். ஒருவர் 2 முறை மட்டுமே பதவி வகிக்க முடியும். 3-வது முறையாக இலங்கை அரசியல் அமைப்புச் சட்டப்படி பதவி வகிக்க முடியாது.

இலங்கை அதிபராகப் பதவி வகித்து வரும் மைத்ரிபால சிறிசேனவின் பதவிக்காலம் டிசம்பர் மாதம் நிறைவடையும் நிலையில் நவம்பர் 16-ல் அதிபர் தேர்தலை அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 41 பேர் வைப்புத்தொகை செலுத்தினர். இந்நிலையில் தேர்தலுக்கான வேட்புமனு நேற்று பெறப்பட்டது.

இதில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளராக மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாசவும், மக்கள் விடுதலை முன்னணியின் அதிபர் வேட்பாளராக அநுர குமார திச நாயக்கவும், இலங்கை சோசலிச கட்சி சார்பில் அஜந்தா பெரேராவும், தேசிய மக்கள் இயக்கம் சார்பில் முன்னாள் ராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க உள்ளிட்ட 35 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

இதில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா, முன்னாள் அமைச்சர்கள் பஷீர் சேகுதாவூத், இல்யால் ஐதுரூஸ் முகம்மது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலவி ஆகிய 4 வேட்பாளர்கள் முஸ்லிம்கள் ஆவார்கள். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம், ஊடகவியலாளர் குணரத்னம் ஆகிய இருவர் தமிழர்கள் ஆவர்.

சுயேச்சையாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கம் 2001 மற்றும் 2004-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். வடக்கு மாகாணசபை உறுப்பினராகவும், யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2010 இலங்கை அதிபர் தேர்தலிலும் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். தமிழர்களுக்கு அரசியல் ரீதியில் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாகவும், தேர்தலில் போட்டியிடுவதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் குணரத்னம் அபே ஜாதிக பெரமுன எனும் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். அதிபர் மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக மீண்டும் மைத்திரிபால சிறிசேனவையே இம்முறையும் களமிறங்குமாறு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தபோதிலும் மைத்ரிபால சிறிசேன போட்டியிடவில்லை. இதனால் கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச ஆகிய இருவரில் ஒருவருக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆதரவு தெரிவிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.

Tags : Tamils ,35 Tamils ,election ,President ,Sri Lankan , Sri Lankan President Election, 2 Tamils, 35 candidates filed
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு