பெங்களூரு: நான் யாருக்கும் பயந்து ஓடவேண்டிய அவசியம் இல்லை. மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீண்டும் அழைத்தால் ஆஜராக தயாராக இருக்கிறேன் என்று நடிகை ராதிகா குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ், பாஜ முக்கிய தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு நெருக்கமானவர் என்று கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட யுவராஜிடம் 75 லட்சம் பெற்றதாக நடிகை ராதிகா குமாரசாமி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து யுவராஜிடம் சி.சி.பி விசாரித்தபோது, ராதிகா மற்றும் அவரது சகோதரன் ரவி ராஜிற்கு 2 கோடி வரை பணம் அனுப்பியதாக கூறினார். இது தொடர்பான ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். இது குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகை குட்டி ராதிகாவுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதையேற்று நேற்று காலை காலை 10.45 மணிக்கு சாம்ராஜ்பேட்டையில் உள்ள சி.சி.பி அலுவலகம் சென்ற ராதிகா, விசாரணை அதிகாரி நாகராஜ் முன்பு ஆஜராகினார். அப்போது பாஜ பிரமுகர் யுவராஜிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள், வங்கி கணக்கு விவரங்களை காண்பித்து விசாரித்தனர். அதற்கு சில கேள்விகளுக்கு முறையான பதில் அளித்தார்.சில கேள்விகளுக்கு எதுவும் தெரியாது என்று பதில் கூறிவிட்டார். இது தவிர 75 லட்சம் வாங்கி கொண்டு எதற்காக திரைப்பட ஒப்புதலுக்கான அக்ரீமென்ட் போடவில்லை என்று சி.சி.பி கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அவர் பிப்ரவரியில் தான் எனக்கு நல்ல ராசி. அன்றைய தினம் அக்ரீமென்ட்டில் கையெழுத்திட திட்டமிட்டிருந்தேன் என்று கூறினார். விசாரணையில் அவர் கொடுத்த அனைத்து வாக்குமூலம் மற்றும் ஆவணங்களை வாங்கி கொண்ட சி.சி.பி போலீசார் தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராகவேண்டுமென்று கூறி அனுப்பி வைத்தனர். சுமார் 4 மணி நேர விசாரணைக்கு பின்னர் ராதிகா குமாரசாமி வெளியே வந்தார். விசாரணைக்கு பின்னர் அவர் கூறும் போது, யாருக்காகவும் பயந்து ஓடவேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய பண பரிமாற்றம் மற்றும் எனக்கு வந்த ரொக்கப்பணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சி.சி.பியிடம் ஒப்படைத்துள்ளேன். அவர்கள் ஆவணங்களை பரிசீலனை செய்துவிட்டு, தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராகவேண்டுமென்று கூறினர். அதற்கு நான் சம்மதம் தெரிவித்தேன்’’ என்றார்….
The post பாஜ பிரமுகரிடம் இருந்து 75 லட்சம் பணம் பெற்ற விவகாரம்: ராதிகா குமாரசாமியிடம் 4 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.