×

உலக அளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்: உலக சுகாதார நிறுவனம் அறிக்கை

ஜெனீவா: உலகளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. World Health Organisation(WHO) என்கிற உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகளின் ஓர் அமைப்பாகும். இந்நிறுவனம் சர்வதேச அளவில்(194 நாடுகளில்) பொது சுகாதாரத்துக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது. மருத்துவரீதியான கல்வித்தகுதி கொண்டவர்களே இதன் உறுப்பினர்களாக உள்ளனர். தலைமை அலுவலகமான ஜெனீவாவில் இதுபோல் தகுதிவாய்ந்த 34 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் 3 ஆண்டுகளுக்கொரு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். WHO ஏப்ரல் 7-ம் தேதி, 1948-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில் தொடங்கப்பட்டது.

உலகில்உள்ள அனைவருக்கும் இயன்றவரை சிறந்த சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும். எந்த நாட்டில் சுகாதார பிரச்னைகள் தலை தூக்கினாலும் இது தாமாகவே தலையிட்டு அதற்கான தீர்வையும் அளிக்கிறது. இதனிடையே உலக சுகாதார நிறுவனம் கண் பார்வை தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்தியது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறுவதாவது; உலக அளவில் 220 கோடி பேர் பார்வை குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்க்கை முறை மாற்றம், முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, போதிய மருத்துவ வசதிகள் இன்மை ஆகியவையே இதற்கு காரணம் என உலக சுகாதார நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

220 கோடி பேர் பகுதியளவு அல்லது முழுமையாக பார்வைத்திறன் இல்லாமல் இருப்பதாகவும் இதில் 100 கோடி பேருக்கான பாதிப்புகளை தவிர்க்க முடியும். குறிப்பாக கணினி மற்றும் மொபைல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள் கண் பார்வை குறைபாட்டிற்கு முக்கிய காரணம் என ஆதாரங்களுடன் கண்டறியப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. மேலும் வெளிப்புற நடமாட்டம் இல்லாமல் வீடு அல்லது மூடிய அறைக்குள் இருப்பதும் கண் குறைபாடுக்கு காரணமாக அமைகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் ஸ்டூவர்ட் கீல் என்ற மருத்துவர் கூறியுள்ளார்.

Tags : World Health Organization , Visually Impaired, World Health Organization
× RELATED உலக சுகாதார நிறுவனம் தகவல்...