×

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையோரம் மீண்டும் ஆளில்லா விமானங்கள்: கண்காணிப்பு தீவிரம்

பெரோஸ்பூர்: பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையோரம் மீண்டும் ஆளில்லா விமானங்கள் தென்பட்டதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து எல்லையில் தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப் எல்லைப் பகுதிகள் வழியாக ஆளில்லா விமானங்கள் மூலம் தீவிரவாதிகள் ஆயுதங்கள், வெடிபொருட்களை கடத்துவதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவற்றின் மூலம் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தான் ஆயுதம் மற்றும் வெடிபொருட்களை சப்ளை செய்து வருவதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே கடந்த மாதம் 2 ஆளில்லா விமானங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், நேற்று மேலும் 2 ஆளில்லா விமானங்கள் தென்பட்டன. அவற்றை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்தனர்.  முதலில், ஒரு விமானம், பாகிஸ்தான் பகுதியிலேயே 4 தடவை கண்ணில் பட்டது. மற்றொரு தடவை, இந்திய பகுதிக்குள் ஏறத்தாழ ஒரு கி.மீ. தூரம்வரை தென்பட்டது. இரண்டாவது விமானம், பாகிஸ்தான் பகுதியில் பஸ்டி ராம்லால் எல்லைப்புற காவல் நிலையம் அருகே காணப்பட்டது. 2 விமானங்களும் திரும்பிச் செல்லும்போது, விளக்குகளை அணைத்து விட்டு சென்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டன.

ஆளில்லா விமானங்கள் தென்பட்டதால் கண்காணிப்பைத் தீவிரப் படுத்த எல்லைப் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எல்லையோரக் குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் இதுபோன்ற ஆளில்லா விமானங்களைக் கண்டால் அது குறித்து உடனடியாகத் தெரிவிக்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


Tags : Pakistan ,border , Punjab, Pakistan border, unmanned flights
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...