×

ராகுலின் சிறப்பு பாதுகாப்பு படை வாபஸ்? மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக பரபரப்பு

புதுடெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர்  ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு படையின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முக்கிய தலைவர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு படை மூலம் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டதை தொடர்ந்து, இந்த சிறப்பு பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இதே பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில்தான் அது திரும்ப பெறப்பட்டது.

தற்போது, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ராகுலுக்கு மத்திய அரசு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘சிறப்பு பாதுகாப்பு படை பாதுகாப்பின் கீழ் நீங்கள் இருப்பதால், வெளிநாட்டு பயணத்தின்போது உங்களுடன் சிறப்பு படை இருக்க வேண்டும். சிறப்பு படை தேவையில்லை என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு படை வாபஸ் பெறப்படும்,’ என்று கூறப்பட்டுள்ளதாக  தெரிகிறது.  ராகுலின் பாதுகாப்பு படை வாபஸ் குறித்து மத்திய அரசு எந்த தகவலையும் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதேபோல், ராகுலும் அரசின் தகவல் குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

ஆனால், ராகுலுக்கு தகவல் அனுப்பப்பட்டது உண்மைதான் என மத்திய அரசு அதிகாரிகள் வட்டாரம் உறுதியாக தெரிவித்துள்ளன. இது குறித்து காங்கி ரசின் செய்தி தொடர்பாளர் பிரணவ்ஜா கூறுகையில், ‘‘மத்திய அரசிடம் இருந்து ராகுலுக்கு எந்த கடிதமும் அலுவல் ரீதியாக கிடைக்கப் பெற்றதாக எங்களுக்கு தகவல் இல்லை. எனவே, இது குறித்து கருத்து கூற முடியாது,” என்றார். தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மஜீத் ேமமன் கூறுகையில், “பாதுகாப்பு வாபஸ் பெறப்படுவது, அவருடைய பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் செயலாக உள்ளது,’’ என்றார்.

Tags : security force ,Rahul ,government , Rahur, Special Security, Central Government
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்