×

ஓடும் ரயிலில் இருந்து விழுந்து இறந்த மும்பை பிச்சைக்காரரின் வங்கி கணக்கில் 8.77 லட்சம்: குடிசை வீட்டில் 1.75 லட்சம் சில்லறை மூட்டை

மும்பை: தண்டவாளத்தில் இறந்து கிடந்த பிச்சைக்காரரின் வங்கிக் கணக்கில் 8.77 லட்சம் டெபாசிட் செய்திருந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவருடைய குடிசை வீட்டில் 1.75 லட்சம் சில்லறை காசுகளும் இருந்தன. ராஜஸ்தானில் உள்ள ராம்கார்க் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பிரதிசந்த் பன்னாராம்ஜி ஆசாத். 1937ம் ஆண்டு பிறந்த ஆசாத்தின் வயது 82. இவர் மும்பையின் கோவண்டியில் தண்டவாளம் அருகில் உள்ள ஒரு குடிசையில் தனியாக வாழ்ந்து வந்தார். இதற்கு முன்னர் சிவாஜி நகர், பைகன்வாடியில் வாழ்ந்து வந்தார். ஆசாத் ரயில்களில் பிச்சை எடுத்து வந்தார். அக்கம்பக்கத்து குடிசைகளை சேர்ந்தவர்களுக்கு, ஆசாத் குடிசையில் தனியாக வாழ்ந்து வந்தவர், சொந்தம் கிடையாது, ரயில்களில் பிச்சை எடுப்பவர் என்று மட்டுமே தெரியும்.

அவர்கள் இரவிலும் மற்ற நேரத்திலும் உணவை ஆசாத்துடன் பகிர்ந்து உண்பார்கள். அவருடைய பெயர் ஆசாத் என்று மட்டுமே தெரியும். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மான்கூர்டுக்கும் கோவண்டிக்கும் இடையே ஓடும் ரயிலில் இருந்து விழுந்த ஆசாத் மரணம் அடைந்தார். தகவல் கிடைத்து விரைந்து வந்த வாஷி ரயில்வே போலீசார் தண்டவாளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விசாரணை நடத்தியபோது அவருடைய பெயர் ஆசாத் என்றும் அவர் கோவண்டியில் தனியாக ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார் என்றும் சொந்தம் என்று யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் ஆசாத் தங்கியிருந்த குடிசைக்கு சென்று சோதனை செய்தனர்.

அங்கு நாலு மூட்டைகள் இருந்தன. அதில் 5, 10, 1, 2 என ஏராளமான சில்லரை காசுகள் இருந்தன. அவற்றை போலீசார் எண்ணினர். மறுநாள்தான் எண்ணி முடிக்கப்பட்டது. அப்போது 4 மூட்டைகளிலும் சில்லறையாக மொத்தம் 1.75 லட்சம் இருந்தது தெரிய வந்தது. இரண்டு நாட்களாக எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் இது தெரிந்தது. மேலும் அங்கு ஒரு இரும்பு பெட்டி இருந்தது. அதை போலீசார் திறந்து பார்த்த போது, ஆதார் கார்டு, பான் கார்டு, உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. அந்த ஆவணங்களில் இருந்துதான் அவருடைய முழு பெயரை போலீசார் தெரிந்து கொண்டனர்.  மேலும் அவர் ராஜஸ்தானில் உள்ள ராம்கார்க் என்ற இடத்தை சேர்ந்தவர் என்றும் அங்கு சுக்தேவ் என்ற மகன் இருப்பதும் தெரிந்தது. மேலும் இரு வங்கிகளில் ஆசாத் மொத்தம் 8.77 லட்சம் வைப்பு தொகை டெபாசிட் ெசய்திருந்தார். அதற்கான ஆவணங்களும் அந்த பெட்டியில் இருந்தது.

மேலும் இரு வங்கிகளில் சேமிப்பு கணக்கில் மொத்தம் ₹96,000 இருந்தது. எல்லா கணக்குகளிலும் சில்லறை காசாக பணம் டெபாசிட் செய்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். வங்கி கணக்குகளில் தன் மகன் சுக்தேவின் பெயரை வாரிசாக பதிவு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து சுக்தேவை கண்டுபிடித்து உடலை ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இப்பணத்திற்கு 5 பேர் உரிமை கோரியுள்ளனர். அவர்கள் தங்களை ஆசாத்தின் மகன்கள் என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்துள்ள ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.



Tags : beggar ,Mumbai , Running Train, Mumbai Beggar
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு