×

கிருஷ்ணா கால்வாயில் சிறுவனை காப்பாற்றியபோது மாயமான மாணவர் சடலம் மீட்பு

சென்னை: சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் கோபி. டிரைவர். இவரது மகன் ஜெகதீசன் (19).  இவர், சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வந்தார். இவர் கடந்த 6ம் தேதி ஊத்துக்கோட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு தந்தை கோபியுடன் துக்க நிகழ்ச்சிக்கு ஜெகதீசன் சென்றனர். பின்னர், அங்கிருந்து ஜெகதீசன், தனது நண்பர்களுடன் ஊத்துக்கோட்டை அருகே உள்ள அனந்தேரி பகுதி கிராமப்புறங்களை சுற்றிப்பார்க்க சென்றுள்ளார்.
அங்கு ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயை பார்த்ததும் ஆகாஷ் (9)  குளிக்க இறங்கி உள்ளான்.  அவனை கால்வாயில் வேகமாக செல்லும் தண்ணீர் இழுக்க தொடங்கியது. இதை பார்த்த  ஜெகதீசன் கால்வாய்க்குள் குதித்து ஆகாஷை தூக்கி கரையில் விட்டார்.

பின்னர், மேலே ஏறும்போது கால் இடறி மீண்டும் கால்வாயில் விழுந்த ஜெகதீசன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் பென்னலூர்பேட்டை  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ரமேஷ், எஸ்.ஐ அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்கள் மூலம் கால்வாயில் விழுந்ததில் மாயமான மாணவன் ஜெகதீசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று  பூண்டி ஏரியில் வாலிபர் சடலம் கிடந்தது.  போலீசாரின் தீவிர விசாரணையில் கிருஷ்ணாகால்வாயில் விழுந்து மாயமான ஜெகதீசன் சடலம் என தெரிந்தது. இதையடுத்து ஜெகதீசனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எச்சரிக்கை பலகை இல்லை :
கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் செல்லும் போதெல்லாம் அதில் குளிக்க சென்று பல பேர்  உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே கிருஷ்ணா கால்வாயில் யாரும் குளிக்க கூடாது  என பொதுப்பணித்துறை அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Tags : Recovery ,Krishna ,canal , Krishna Canal, boy, student body
× RELATED சரணாகதியே தத்துவத்தின் ஒரு வெளிப்பாடு