×

எக்ஸ்பிரஸ் ரயில் மோதி 2 இளம்பெண்கள் பலி

தாம்பரம்: திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் மித்ரா (25). இவர், தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் தனியாக அறை எடுத்து தங்கி சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வந்தார்.இந்நிலையில் வேலை தொடர்பாக வெளிநாடு சென்ற அவர் நேற்று காலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். நேற்று காலை பெருங்களத்தூரில் உள்ள அவரது அறைக்கு வந்துவிட்டு, வேலைக்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றார். அப்போது பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்: ஆதம்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த டாக்டர் ஜோதி என்பவரது மகள் அனுஷா (17) கிண்டி-பரங்கிமலை ரயில் நிலையம் இடையே ஆலந்தூர் நிதிநிலை மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ரயில்வே கிராசிங் பகுதியை கடக்க முயன்றார். அப்போது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது மோதியதில் அனுஷா பரிதாபமாக பலியானார். மாம்பலம் ரயில்வே போலீசார் வந்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


Tags : teenagers ,train crash ,Express , Express train, teenagers killed
× RELATED படுக்கையில் இறந்து கிடந்த 2 வாலிபர்கள்