×

தெருவோர வியாபாரிகளுக்கான விற்பனை மண்டலங்கள் இந்த மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும்: மாநகராட்சி அறிவுரை

சென்னை: தெருவோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக தெருவோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் சாலையோர வியாபாரம் முறைப்படுத்துதல் சட்டத்தை கடந்த 2014ம் ஆண்டு மத்திய அரசு இயற்றியது. இதனை பின்பற்றி தமிழ்நாடு அரசு 2015ம் ஆண்டு தெரு வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் தெருவோர வியாபாரம் முறைப்படுத்துதல் விதிகளை  உருவாக்கியது. இதன்படி, சென்னை தெருவோர வியாபாரிகளை கணக்கெடுக்கும் பணி நடந்தது. அதன் மூலம்  39 ஆயிரம்  பேர் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் பயோ மெட்ரிக்  முறையில் பதிவு செய்யப்பட்டு மாநகராட்சி சார்பில் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. தொடர்ந்து தெருவோர வியாபாரிகள் சட்ட விதிகளின்படி, நகர விற்பனை குழுவை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதன்படி அனைத்து மண்டலங்களிலும் நகர விற்பனை குழு தேர்தல் முடிந்து உறுப்பினர்கள் தேர்தெடுக்கப்பட்டனர்.

இந்த நகர விற்பனை குழுவின் தலைவராக மண்டல அதிகாரி செயல்படுவார். மண்டல செயற்பொறியாளர், இரு காவல் துறை அதிகாரிகள், என்ஜிஓ மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் நியமன உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதை தவிர்த்து   தெருவோர வியாபாரிகள் 6 பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்டனர். இதன்படி தேர்தல் நடந்து 15 தொகுதிகளிலும் நகர விற்பனை குழு அமைக்கப்பட்டது. இதன்பிறகு அனைத்து மண்டலங்களிலும் நகர விற்பனைக் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சம்பந்தப்பட்ட மண்டலத்தில் எந்த பகுதிகளில் தெருவோர வியாபாரிகளுக்கான விற்பனை மண்டலம் அமைப்பது தொடர்பாக  ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி வருவாய் அலுவலர் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இதன்படி காவல் துறையுடன் இணைந்து இந்த மாத இறுதிக்குள் விற்பனை மண்டலங்களை இறுதி செய்யும்  பணியை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Sales zones ,street vendors , Street vendors, sales outlets, corporation
× RELATED சென்னை தி. நகரில் சாலையோர கடை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம்