×

வைரலாகும் வக்கீலின் வீடியோ தமிழ் வளர்த்த மதுரையில் கடைகளுக்கு இந்தியில் பெயர்கள்

மதுரை: சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கடைகளின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டுள்ளதாக கடைக்காரர்களிடம் முறையிடும் வக்கீலின் வைரல் வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் 15 நாளில் பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையைச் சேர்ந்தவர் வக்கீல் தீரன் திருமுருகன். தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர். சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் பகுதிக்கு வந்து, சுற்றியுள்ள பல இடங்களில் கடைகளின் ெபயர்கள் இந்தியில் இருப்பதைக் கண்டு, கடைக்காரர்களிடம், ‘சட்டப்படி தமிழில் தான் கட்டாயம் எழுத வேண்டும்’ என அறிவுறுத்திச் சென்றுள்ளார். இதுதொடர்பாக அந்த வீடியோவில் உள்ள காட்சிகள் பின்வருமாறு: வக்கீல்:  தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம். மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு ேகாபுர வாசல் பகுதியில் நிற்கிறேன். இருபுறங்களில் உள்ள கடைகளின் பெயர்கள் இந்தி மொழியில் உள்ளன. முச்சங்கம் வைத்த தமிழ் நாட்டின் நிலையை பாருங்கள். சாப்பாட்டு கடையின் பெயர் இந்தியில் உள்ளது. தமிழ் நாட்டில் ஏன் இந்தி? கடைக்காரரே, வெளியில் வந்து பெயர் பலகையை பாருங்கள். முதலில் தமிழில் எழுதுங்கள்.

கடைக்காரர்: வியாபாரத்திற்காகத்தான், இந்தி வேணும். தமிழிலும் வச்சுருக்கேன். வக்கீல்: அதைப்போல இந்த போர்டையும் வைக்க ேவண்டியதானே?
கடைக்காரர்: எல்லோரும் மாற்றும்போது நானும் மாற்றுவேன். 10 கடை இருக்கு. எல்லா கடையும் இப்படித் தான் இருக்கு. வக்கீல்: இதெல்லாம் பேசக்கூடாது. எங்க இருந்து நீ கடை நடத்துற. யார் சாப்பிட வர்றா? (அப்போது சுற்றி இருந்த ெபாது மக்கள் திரண்டு, ‘நீ தமிழில் பெயர் பலகையை மாற்ற வேண்டியது தானே’ என்கின்றனர்). வக்கீல்: எல்லா இந்திக்காரர்களுக்கும் சொல்றேன். இந்தியில் பெயர்பலகை வைப்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனா, 5:3:2 என்ற விகிதத்தில் முதலில் தமிழ் பெரிதாகவும், அதற்கடுத்த அளவில் ஆங்கிலம், அதற்கடுத்த அளவில் இந்தி மட்டுமில்ல, எதுல வேணுமென்றாலும் வைத்துக் கொள். வியாபாரம் பண்றது இங்க தமிழ்நாட்டு மக்களிடம். ஆனா, எழுதுறது மட்டும் இந்தி. கர்நாடகாவுலயோ, வேற மாநிலங்களிலோ எழுதினா பிக்கிறது. இங்க எல்லா உரிமையும் கொடுத்துள்ளோம். இது பாண்டிய நாடு. சங்கம் வளர்த்த தமிழ்நாடு. இங்க உட்கார்ந்துகிட்டு, இந்தில இருக்கு. அடுத்தமுறை வருவேன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில இருக்கு. இங்க உட்கார்ந்துகிட்டு சேட்டை பண்றீங்க..

இப்படி முடிகிறது அந்த வைரல் வீடியோ. இதுகுறித்து வக்கீல் தீரன் திருமுருகனிடம் கேட்டபோது, ‘‘இது நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மதுரை நகரில் சுற்றுலாவாசிகள் அதிகம் வரும் பகுதியான மீனாட்சியம்மன் கோயில் சுற்றுப்பகுதிக்குள் நுழையும் போது ஏதோ, வடநாட்டிற்குள் செல்வதைப் போல உள்ளது. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும்’’ என்றார்.  தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் எங்களிடம் இல்லை. தொழிலாளர் நலத் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’’ என்றனர்.

Tags : lawyer ,Madurai ,Shops , Hindi names, shops, Madurai
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...