×

அத்திவரதர் வைபவம் முடிந்தும் அறநிலையத்துறை நன்கொடை வசூலிப்பு : பக்தர்கள் குற்றச்சாட்டு

சென்னை: அத்திவரதர் வைபவம் முடிந்த நிலையில் தற்போது வரை அதற்காக அறநிலையத்துறை நிர்வாகம் நன்கொடை வசூலித்து வருவதாக பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வசந்த மண்டபத்தில் கடந்த ஜூலை 1ம் தேதியன்று முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார். 48 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர் ஆகஸ்ட் 17ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார். இந்த வைபவத்தில் சுமார் 1 கோடி பேருக்கு மேல் கலந்து கொண்டு அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

அப்போது பக்தர்களுக்கான தண்ணீர், உணவு உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து தர அத்திவரதர் நன்கொடை என்ற பெயரில் தமிழக அரசு வசூலித்தது. இதற்காக, அறநிலையத்துறை இணையதளத்தின் மூலம் நன்கொடை தரலாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் அத்திவரதர் வைபவம் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதியுடன் நிறைவுற்ற நிலையில் தற்போதும் அறநிலையத்துறை இணையதளத்தின் மூலம் நன்கொடை பெறுவதற்கான பக்கம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் அத்திவரதர் சிறப்பு மலரை பெறுவதற்காக இணையதளத்தை கிளிக் செய்யும் ேபாது பலர் நன்கொடை பக்கத்தை பயன்படுத்தி பணம் செலுத்தி விடுவதாக கூறப்படுகிறது. எனவே, அத்திவரதர் நன்கொடை பக்கத்தை நீக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏமாற்றும் கும்பல்

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தரிசனம், அன்னதான பதிவுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இதுதொடர்பாக அறநிலையத்துறை முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. இதை பயன்படுத்தி, ஒரு கும்பல் ஆன்லைனில் முன்பதிவு செய்வதாக பணம் பறிப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, பக்தர்கள் கோயில் பெயரை இணையதளத்தில் டைப் செய்தால் கூட நேராக தனியார் கோயில் இணையதளம் பக்கத்துக்கு செல்வதாகவும், அதனால், தான் தவறுதலாக தனியாரிடம் பணம் செலுத்தி விடுவதாகவும் குமுறுகின்றனர்.



Tags : The Atavaratar Ceremony ,Department of Charity , Donations , Department of Charity , Attivaratar Ceremony
× RELATED பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள...