×

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு 3 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் 3 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தென்பெண்ணை ஆற்றில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 41.82 அடி நிரம்பியுள்ளது. அணைக்கு 1,368 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இது அப்படியே தென்பெண்ணையாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. தற்போது, தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு 2,500 கன அடியாக அதிகரித்து உள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 42.50 அடி நிரம்பியுள்ளது.

மதகுகள் பழுதாகியுள்ள நிலையில் 52 அடிக்கு  தேக்கி வைக்க முடியாததாலும், பாதுகாப்பு கருதியும் அணைக்கு வரும் 2,500 கன அடி நீரும் பிரதான முதல் மதகு வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தர்மபுரி மேல்பெண்ணையாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் மெய்யழகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர வேண்டும். மேலும், ஏரி, குளம், குட்டை, கால்வாய் மற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் குளிக்கவோ அல்லது துணி துவைக்கவோ செல்பி எடுக்கவோ கூடாது.  குழந்தைகளை நீர்நிலைகளின் அருகில் செல்லாதவாறு பார்த்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : flooding ,counties , Caution for flooding,3 counties,coconut water
× RELATED அடுத்த 3 மணி நேரத்தில் 7...