×

பிஎம்சி வங்கியில் 2500 கோடி கடன் மோசடி எச்டிஐஎல் இயக்குனர்களின் விமானம், பங்களா சிக்கியது

புதுடெல்லி: பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் (பிஎம்சி) 4,355 கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, வங்கியில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த வங்கியில் இருந்து வீட்டு வசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு  நிறுவனமான எச்டிஐஎல், 2500 கோடி கடன் பெற்றதிலும் முறைகேடுகள் நடந்துள்ளதும் அம்பலமானது. இந்த கடனை திருப்பி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்ட இந்நிறுவனத்தின் இயக்குனர்கள், முறைகேடுக்கு உதவிய வங்கி அதிகாரிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். இந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ராகேஷ் வாதவான், சாரங் வாதவான் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரின் பெயரில் உள்ள 3,500 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்களுக்கு மேலும் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஏற்கனவே ஒரு தனி விமானத்தை பறிமுதல் செய்த நிலையில், மேலும் ஒரு விமானம் இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விமானமும் இருவருக்கும் சொந்தமானது என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மும்பை ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் என்ற பகுதியில் 2.5 ஏக்கர் பரப்பில் 22 அறைகளை கொண்ட மிகப்பெரிய சொகுசு பங்களா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பங்களாவுக்கு அருகிலேயே அதிவேக கப்பல் ஒன்றும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, இவற்றை பறிமுதல் செய்யும் பணியில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Directors Flight ,BMC Bank ,HDIL ,PMC Bank , HDIL Directors Flight, Rs 2500 Crore ,Credit Scam , PMC Bank
× RELATED பிஎம்சி வங்கி மோசடி 3 இயக்குநர்கள் கைது