×

87வது விமானப்படை தினம் கொண்டாட்டம் கமாண்டர் அபிநந்தன் தலைமையில் சீறிப்பாய்ந்த மிக் போர் விமானங்கள் : ஹிண்டனில் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்

ஹிண்டன்: நாடு முழுவதும் 87வது விமானப்படை தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில், பாலகோட் ஹீரோ அபிநந்தன் தலைமையில் மிக் விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்து சாகசம் நிகழ்த்தியது. விமானப்படைக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கடந்த 1932ம் ஆண்டு அக்டோபர் 8ம் தேதி இந்திய பாதுகாப்பு படையில் விமானப்படை உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் ஈடுபடுவதற்காக ஆங்கிலேயர்களால் இப்படைப்பிரிவு கொண்டு வரப்பட்டது.  இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், 87வது இந்திய விமானப்படை தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.விமானப் படை தினத்தை முன்னிட்டு, ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் மற்றும் விமானப் படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதாவுரியா ஆகியோர் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

இந்நாளில், விமானப் படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை கவுரவப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டார். விமானப்படை வீரர்களுக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, ‘நமது விமானப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நாடே பெருமையுடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. இந்திய விமானப்படை மிகுந்த அர்ப்பணிப்புடனும் சிறப்புடனும் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறது,’ என்றார். இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படையின் வலிமையை பறைசாற்றும் வகையில் கண்கவர் சாகச நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விமானப்படை தளபதி பதாவுரியா, வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானின் பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய 2 படைப் பிரிவுகளுக்கு அவர் விருது வழங்கி கவுரவித்தார். பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை வீழ்த்தியதற்காக கமாண்டர் அபிநந்தன் இடம்பெற்ற படைப்பிரிவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது. பின்னர் விமானப் படை சாகசம் தொடங்கியது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட சினூக் போக்குவரத்து ஹெலிகாப்டர்கள் மற்றும் அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் முதல் முறையாக சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன. சி-17 குளோப்மாஸ்டர் 3, மிராஜ் 2000, சுகோய் 30 எம்.கே.ஐ. ஆகிய போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்தின. மிக் பைசன் போர் விமானங்களின் சாகசத்தை, விங் கமாண்டர் அபிநந்தன் முன்னின்று வழிநடத்தினார். அவரது தலைமையில் மிக் பைசன் விமானங்கள் விண்ணில் சீறிப்பாய்ந்தன. இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

அரசின் கொள்கையில் மிகப்பெரிய மாற்றம்

விமானப்படை விழாவில் பேசிய ஏர் மார்ஷல் பதாவுரியா, ‘‘நம் அண்டை நாட்டின் பாதுகாப்பு சூழல் மிகுந்த கவலைக்குரிய ஒன்றாக உள்ளது. எனவே, புல்வாமா போன்ற தாக்குதல்கள் நாம் தொடர்ந்து அச்சுறுத்தப்படுவதையும், எல்லா நேரத்திலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் நினைவுபடுத்துகிறது. பாலகோட்டில் தீவிரவாதிகள் முகாம் மீது குண்டுவீசும் முடிவானது, பாதுகாப்பு தொடர்பான அரசின் கொள்கையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றமாகும். தீவிரவாதிகளை தண்டிக்கும் திறனும், அவர்களின் தாக்குதலை முறியடிக்கும் வலிமையும் நமக்குண்டு என்பதை ஓராண்டுக்கு முன் நிரூபித்துள்ளோம். அதுபோல எந்த சவாலையும், அச்சுறுத்தலையும் எந்த சமயத்திலும் எதிர்கொண்டு நாட்டை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்க வேண்டும்,’’ என்றார்.

* போரில் முக்கிய பங்கு வகிக்கும் தாக்குதல் விமானங்கள், தாழ்வாக பறந்து எதிரி நாடுகளில் உள்ள இலக்கை தகர்க்கக் கூடியவை. தாக்குதல் விமானங்கள் பிரிவில் உலகின் சக்தி வாய்ந்த 4வது நாடாக இந்தியா உள்ளது.
* எதிரி நாட்டு விமானங்கள் தாக்குதல் நடத்தினால் இடைமறிப்பது, வானில் உயரத்தில் இருந்தபடி எதிரிகள் மீது குறிவைத்து குண்டுவீசுவது போர் விமானங்களின் பணியாகும். இதிலும் உலக அளவில் இந்தியா 4வது இடத்தை பெற்றுள்ளது.
* மீட்பு பணி, ஆயுதங்கள் மற்றும் வீரர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல போக்குவரத்து விமானங்கள் பயன்படுகின்றன. இதில் உலக அளவில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.
*  பயிற்சி அளிக்க பயன்படுத்தும் பயிற்சி விமானப்பிரிவில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.
* தாக்குதல் ஹெலிகாப்டர்கள் பிரிவில், உலகளவில் இந்தியா 27வது இடத்தில் உள்ளது.


Tags : Abhinandan ,Air Force Day Celebration ,Mick ,Hinton , 87th Air Force Day Celebrated , Commander Abhinandan
× RELATED போர் விமானி அபிநந்தன் கதையில் பிரசன்னா