×

நாடு முழுவதும் கள்ள ஓட்டுக்களை தடுக்க வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு?

* இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை
மத்திய சட்ட  அமைச்சகம் தீவிர பரிசீலனை

புதுடெல்லி: நாடு முழுவதும் கள்ள ஓட்டுக்களை தடுக்க வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சட்ட அனுமதி கோரி  மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சகம் தீவிர பரிசீலனை செய்து வருகிறது. நாடு முழுவதும் அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கும், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைகள் பெறுவதை தடுத்திடவும், போலி வாக்காளர் அட்டைகள் மூலம் கள்ள ஓட்டு போடப்படுவதை தடுத்திடவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக, கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. மூன்றே மாதத்தில் 13 கோடி பேரின் ஆதார் தகவல்கள் பெறப்பட்டன. இதற்கிடையே, அதே ஆண்டு ஆகஸ்டு மாதம், தேர்தல் ஆணையத்தின் முயற்சிக்கு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டது. ஆதார் கட்டாயமாக்கப்படுவது தொடர்பான வழக்கு ஒன்றில், தனி மனித சுதந்திரம் காப்பது அடிப்படை உரிமை என குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் தகவல்களை இணைப்பதற்கான சட்டம் இயற்றப்படுவதன் மூலமாக இதனை நெறிபடுத்த முடியும் என்றுஉத்தரவிட்டது. இதன் காரணமாக, ஆதார் எண் சேகரிப்பு பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென முக்கிய அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில், வாக்காளர் அட்டையுடன் ஆதாரை இணைப்பதற்கான முயற்சிகளை தேர்தல் ஆணையம் மீண்டும் முன்னெடுத்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியது. அதில், ‘ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களை எளிதில் நீக்க முடியும். இதற்காக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950, ஆதார் சட்டம் ஆகியவற்றில் தேவையான திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். ஏற்கனவே, வாக்காளர் அட்டை வைத்திருப்பவர்களிடம் ஆதார் எண்ணை பெறவும், புதிதாக விண்ணப்பம் செய்பவர்களிடம் ஆதார் எண் பெறவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் வாக்களிக்கும் முறையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது குறித்து ஆராய இந்த நடவடிக்கை உதவும்.

அதே சமயம், ஆதார் இல்லை என்பதற்காக ஒருவரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. ஆதார் இல்லாதவருக்கு வாக்காளர் அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் தராமலும் இருக்க மாட்டோம்,’ என தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது, தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை சட்ட அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து சட்ட அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை மீது  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்,’’ என்றார். எனவே, விரைவில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையும் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : country ,Voter , Voter card-Aadhaar link , prevent counterfeit ,driving across the country?
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!