×

சிரியாவில் இருந்து திரும்பிய அமெரிக்கப்படை: முடிவில்லா போர்களில் வீரர்கள் உயிரிழப்பதை விரும்பவில்லை...அதிபர் டிரம்ப் பேட்டி

வாஷிங்டன்: பிறநாடுகளில் நடந்துவரும் முடிவே இல்லாத போர்களில் அமெரிக்க வீரர்கள் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுவதை விரும்பாததால் அவர்களை திரும்பப் பெறுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ்.  பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக 2011-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவின்பேரில் அமெரிக்க படைகள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அந்நாட்டில் செயல்பட்டுவந்த உள்ளூர் குர்திஷ் போராளிகளுடன் இணைந்து  அமெரிக்க படைகள், ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து தரைவழி மற்றும் வான்தாக்குதல்கள் நடத்தினர். இதனால் ஐ.எஸ். பிடியில் இருந்த பல நகரங்கள் மீட்கப்பட்டு பெரும்பாலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கிடையே, சிரியாவின் வடக்கு எல்லை பகுதியில் உள்ள அமெரிக்கப்படைகளை திரும்பப்பெறுவதாக கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து, சிரியாவின் வடகிழக்கு எல்லையில்  இருந்து அமெரிக்கப்படைகள் நாடு திரும்ப தொடங்கியுள்ளனர். அதிபர் டிரம்பின் இந்த முடிவுக்கு அமெரிக்க குடியரசு கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்கப் படைகளை சிரியாவின் வடக்கு  எல்லையில் இருந்து திரும்ப பெறுவதால் துருக்கி படைகள் குர்திஷ் போராளிகளை குறிவைத்து அழித்து விடுவார்கள். அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்பட்ட குர்திஷ் போராளிகளை நாம் துருக்கியிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என  குடியரசு கட்சி உறுப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.  
இந்நிலையில், சிரியாவில் இருந்து அமெரிக்கப்படைகள் திரும்பபெறுவது குறித்து அதிபர் டொனால்டு டிரம்ப் கூறுகையில், அமெரிக்க படைகள் ஒன்றும் போலீஸ் படை கிடையாது. சிரியாவில் போர் தொடங்கி பத்தாண்டுகளுக்கு மேல்  ஆகிவிட்டது. முடிவே இல்லாத போர்களில் அமெரிக்க வீரர்கள் உயிரிழப்பதை நான் விரும்பவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலின் போது சிரியா, ஆப்கானிஸ்தான் நாடுகளில் உள்ள அமெரிக்க படைகளை திரும்ப அழைப்பதாக வாக்குறுதி  அளித்திருந்தேன். அதன்படியே சிரியாவில் இருந்து நமது படைகள் திரும்பி வர உத்தரவிட்டுள்ளேன். துருக்கி படைகள் ஒருவேளை குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல் நடத்தினால் அந்நாடு கடுமையான பொருளாதார சீரழிவை சந்திக்க நேரிடும்   என அவர் தெரிவித்தார்.


Tags : soldiers ,Trump ,Syria ,US , US troops returning from Syria: soldiers do not want to die in endless wars ... Interview with President Trump
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்