×

இந்தியா - பிரான்ஸ் நட்பை ரபேல் விமானம் கொள்முதல் பிரதிபலிக்கிறது: ரபேல் ஒப்படைப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்திடம் அதிநவீன வசதிகள் கொண்ட 36 ரஃபேல் ரக போர் விமானங்களை 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய அரசு கடந்த 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. இதனை பெற்றுக்  கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபர் மெக்ரானை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாரீஸ் நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது , இருநாட்டு பாதுகாப்பு குறித்தும்  ஆலோசிக்கப்பட்டது. இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, பிரான்ஸ் நாட்டின் மெரிக்னா நகரில் நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான  முதல் ரபேல் போர் விமானம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. ரபேல் விமானத்துக்கு சாஸ்திரி பூஜா எனப்படும் ஆயுத பூஜையும் ராஜ்நாத் நடத்தினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா - பிரான்ஸ் உறவில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளோம் என தெரிவித்தார். இரு முக்கிய ஜனநாயக நாடுகளுக்கு இடையே அனைத்துத் துறைகளிலும்  ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும் என்றும் ரஃபேல் விமானத்தின் செயல்பாடுகளைக் காண ஆர்வமாக உள்ளேன் என்றார். இந்திய விமானப்படைக்கு இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள் என்றும் இந்தியா - பிரான்ஸ் இடையே ஆழமான நட்பை  ரபேல் விமானம் கொள்முதல் பிரதிபலிக்கிறது என்றும் கூறினார்.

ரஃபேல் விமானத்தின் விநியோகம் திட்டமிடப்பட்டிருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், இது எங்கள் விமானப்படைக்கு மேலும் பலம் தரும் என்று நான் நம்புகிறேன் என்றார். ரஃபேல் என்பது ஒரு பிரெஞ்சு சொல், அதாவது காற்றின் வாயு  என்று பொருள். விமானம் அதன் பெயருக்கு ஏற்ப வாழும் என்று நான் நம்புகிறேன். பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ரஃபேல் இந்தியாவின் விமான ஆதிக்கத்தை அதிவேகமாக உயர்த்தும் என்று நான்  நம்புகிறேன் என்றார்.


ரபேல் போர் விமானம்:

1,389 கி.மீ. வேகத்தில் செல்லும் ரஃபேல் விமான நீளம் 15.3 மீட்டர், 5.3மீ உயரமும், 10,000 கிலோ எடையும் உடையது. 10,000 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் படைத்தது. ரஃபேல் விமானத்தில் ஒருமுறை  எரிபொருள் நிரப்பினால் 3,700 கி.மீ. வரை பறக்கும் திறன் கொண்டது.  இரட்டை இன்ஜின் கொண்ட அதிநவீன போர் விமானமான ரஃபேல் வானிலிருந்து பூமியில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட நவீன போர் விமானம் ஆகும்.  இந்த விமானத்தில் உலகின் மிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளான ஸ்கால்ப் மற்றும் ஸ்டார்ம் ஷேடோ உள்ளிட்ட ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருக்கும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இந்த ஏவுகணைகள் 4 பிளஸ் பிளஸ் தலைமுறை  ஏவுகணைகளாகும். இவை குகைக்குள் பதுங்கியிருக்கும் எதிரிகளை அழிக்க கடினமான பாறையையும், ஊடுருவி தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சக்திவாய்ந்த போர் கருவிகள், ஏவுகணைகளை பொருத்தி  பயன்படுத்த ஏற்றது என்பதால் இந்திய ராணுவத்திற்கு இவை பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்துவதற்கான உள்கட்டமைப்புகளை இந்திய விமானப்படை ஏற்கனவே உருவாக்கியுள்ளது. மேலும் விமானிகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸிடமிருந்து வாங்கப்படும் 36 ரஃபேல்  விமானங்களில் 18 விமானங்கள் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நிறுத்தப்படவுள்ளன. வியூகம் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானப்படைத் தளம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையிலிருந்து 220 கிலோ மீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது. மீதமுள்ள 18 விமானங்கள் மேற்கு வங்கத்தில் ஹசிமாரா விமானப்படை தளத்தில் நிறுத்தப்படவுள்ளன. இந்த இரு விமானப்படை தளங்களிலும் 400 கோடி ரூபாய் செலவில் ரஃபேல் போர் விமானங்களை நிறுத்தி  வைப்பதற்கான கட்டமைப்புகள், பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Tags : Rajnath Singh ,Rafael ,India ,France ,handover ,aircraft acquisition , Rafael aircraft acquisition reflects India-France friendship: Defense Minister Rajnath Singh
× RELATED ரூ.39,125 கோடிக்கு ஏவுகணைகள் போர்விமானங்கள் வாங்குகிறது இந்தியா