×

சென்னையில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு சார்பில் பயிற்சி வழங்கும் திட்டம் தொடக்கம்

சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு சார்பில் சென்னையில் குடிசை பகுதியில் வாழும் பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையிலான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் காவல் பிரிவு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. சென்னையில் காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் செயல்பட்டு வரும் இந்த பிரிவினருக்கு அம்மா பேட்ரோல் என்னும் வாகனமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் கல்லூரிகள், அலுவலகங்களில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் குடிசை பகுதிகளை சேர்ந்த பெண்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டத்தை துவங்கியுள்ளனர்.

இதனை தொடர்ந்து, திடீர் குப்பம், கோதமேடு, கண்ணம்மாபேட்டை, தேனாம்பேட்டை, சுந்தரா நகர் குப்பம், ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன் உள்ளிட்ட குடிசை பகுதிகளை சேர்ந்த சுமார் 50 பெண்களுக்கு தேவையின் அடிப்படையில் பயிற்சி வழங்கப்படுகிறது. அதில் ஓட்டுநர்  பயிற்சி, தையற் பயிற்சி, அழகு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளும் தனியார் அமைப்புகளின் உதவியுடன் வழங்கப்படுகிறது. சைதாப்பேட்டை வாய்ஸ் கிளப்பில் நடைபெற்ற துவக்க நிகழ்ச்சியில் துணை ஆணையர் ஜெயலட்சுமி மற்றும் தனியார் அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் இந்த திட்டத்தை அனைத்து குடிசை பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : women ,Chennai ,children , Chennai, women, children, crime, training, program, launcher
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது