×

பொருளாதார மந்தநிலை:தொடர்ந்து 8வது மாதமாக உற்பத்தியை குறைத்த மாருதி நிறுவனம்; நடப்பாண்டில், ஒரே ஒரு நானோ கார் மட்டுமே விற்பனை

மும்பை : பொருளாதார மந்தநிலையால் வாகன உற்பத்தித் துறையில் பாதிப்பு அதிகரித்துள்ளதால் தொடர்ந்து 8வது மாதமாக மாருதி நிறுவனம் உற்பத்தியை குறைத்துள்ளது. செப்டம்பர் மாதத்திற்கான வாகன உற்பத்தி 17.48% குறைக்கப்பட்டுள்ளதாக மும்பை பங்குச் சந்தையில் மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒட்டு மொத்தமாக 1,32,199 வாகனங்களை மட்டுமே மாருதி நிறுவனம் தயாரித்துள்ளது. இது கடந்த ஆண்டு செப்டம்பரில் தயாரித்ததை விட 28,000 வாகனங்கள் குறைவாகும். செப்டம்பரில் மட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் முதலே பொருளாதாரம் மந்தநிலையை கருத்தில் கொண்டு மாருதி சுசூகி நிறுவனம் உற்பத்தியை குறைத்து கொண்டுள்ளது.

இதே போல் அசோக் லேலாண்ட் உள்ளிட்ட பிற வாகன உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தியை குறைத்து கொண்டிருப்பதற்கு விற்பனை சரிவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது. தசரா, தீபாவளி போன்ற பண்டிகையையொட்டி கார், பைக் உள்ளிட்ட பயணிகள் வாகனத்திற்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டாலும்  விற்பனை அதிகரிக்கவில்லை. குறிப்பாக 1 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் குறைந்த விலை காரான டாடா நானோ கடந்த 9 மாதத்தில் ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனையாகி உள்ளது. பொருளாதாரத்தை சீரமைக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகள் அறிவித்தாலும் சரிவில் இருந்து வாகன உற்பத்தி நிறுவனங்கள் மீண்டு வர முடியாமல் இருப்பதால், அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலமே கேள்வி குறியாகி உள்ளது.


Tags : firm ,slowdown ,Maruti , Economy, recession, Maruti firm, Mumbai stock market, Tata Nano
× RELATED மும்பை பங்குச்சந்தை: சென்செக்ஸ் 549...