×

இத்தாலியில் பாலத்திற்கு அடியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட இளம் இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மை

ரோம்: பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா சபையில் உரையாற்றிய இயற்கைப் போராளி கிரேட்டா தன்பெர்கின் உருவபொம்மையை  இத்தாலியில் பாலத்திற்கு அடியில் தூக்கில் தொங்கவிடப்பட்ட நபர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவ நிலை மாற்றம் குறித்த மாநாடு நடந்தது. இதில், சுவீடனில் இருந்து வந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க், பருவநிலை மாற்றம் குறித்து ஆவேசமாக பேசினார். மேலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமலிருப்பதற்கு என்ன தைரியம்? என உலக நாடுகளை கடுமையாக சாடினார். இதற்கு உலகம் முழுவதும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து இவரால் ஈர்க்கப்பட்ட பள்ளிச் சிறார்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் பருவநிலை மாற்றத்தின் மீது அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கக்கூடும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்தாலியின் ரோம் நகரில் உள்ள பாலம் ஒன்றின் கீழ், கிரேட்டா தன்பெர்க்கின் உருவ பொம்மையை மர்மநபர்கள் தூக்கில் தொங்கவிட்டு சென்றுள்ளனர். அதில் கிரேட்டா உங்கள் கடவுள் என ஆங்கிலத்தில் எழுதி உள்ளனர். இத்தகைய மோசமான அச்சுறுத்தலுக்கு டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த ரோம் நகர மேயர் விர்ஜினியா ரக்கி, கிரேட்டா தன்பெர்க்கின் உருவபொம்மை தங்களது நகரில் தூக்கில் தொங்கவிடப்பட்டிருப்பது வெட்கக்கேடானது என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கிரேட்டாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் ரோம் நகரின் முழு ஆதரவை தெரிவித்து கொள்வதாகவும், பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கு கடமைப்பட்டிருப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டோம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.


Tags : Greta Thunberg ,Greta Thunberg of Portrait ,Italy , Italy, bridge, gallows, young militant Greta Thunberg, embodiment
× RELATED பிஎன்பி பாரிபா ஓபன்: கார்லோஸ் அல்கராஸுடன் மெத்வதேவ் பலப்பரீட்சை