×

சென்னையில் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கைது: 420 போதை மாத்திரைகள் பறிமுதல்

சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த போதை மாத்திரை விற்பனை கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். திருவேங்கடம் தெருவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இன்று தனிப்படை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த விடுதியில் ஒரே அறையில் 5 இளைஞர்கள் தங்கியிருப்பதை கண்டனர். மேலும் அவர்களது நடவடிக்கையிலும் சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அறை முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, அங்கு மிட்டாய் மற்றும் ஸ்டாம்ப் வடிவில் சுமார் 420 போதை மாத்திரைகள் இருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் சென்னையை சேர்ந்த கிஷோர் பாபு, டேனியல், வசந்த், அரவிந்த் மற்றும் ஷோபன் ராஜ் எனவும், அவர்கள் ஐவரும் போதை மாத்திரை கடத்தலில் ஈடுபட்ட வந்ததும் தெரியவந்தது. இந்த கும்பல் ரயில் மூலம் மும்பையில் இருந்து கடத்தி வரப்படும் போதை பொருட்களை போதை பொருள் டீலரான பெரம்பூரை சேர்ந்த அசோக் பாய் மூலம் பெற்றுக் கொண்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள அவர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் தற்போது இந்த மாத்திரைகள் யாருக்கு விற்பனை செய்ய பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்து வருகின்றனர்.


Tags : gang ,Chennai , Chennai, drug pills, arrests, 420 drug pills, confiscation
× RELATED புதுச்சேரியில் கோயில் ஊர்வலத்தில் பெயிண்டர் கொலை வழக்கு: போலீஸ் வலை