×

குலசேகரப்பட்டினத்தில் உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா கோலாகலம்: பல்வேறு வேடங்கள் அணிந்து பக்தர்கள் வழிபாடு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செங்கோடு அருகே குலசேகரப்பட்டினத்தில் நடைபெற்று வரும் உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து தங்களுடைய காணிக்கையை செலுத்தினர். தசரா திருவிழா சூரசம்ஹாரம் இன்று இரவு நடைபெறுவதையொட்டி அங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வண்ணம் உள்ளனர். உலகப்புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக விளங்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதன் 10ம் நாளான இன்று விரதமிருந்து காப்பு கட்டிய பக்தர்கள் காளி, அம்மன், நரசிம்மன், ஆஞ்சநேயர், குறவன், குறத்தி, ராஜா, ராணி உள்ளிட்ட பல்வேறு வேடங்கள் அணிந்து தர்மமெடுத்து கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினர். திருவிழாவில் முக்கிய நிகழ்வான மகிசா சூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கோவில் கடற்கரை பகுதியில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை பகுதியில் மின் விளக்குகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.


Tags : festival ,World ,devotees ,Dussehra ,Kulasekarapattinam , Kulasekarapattinam, Dasara Festival, Vedas, worship of devotees
× RELATED தாய்லாந்தில் நடைபெற்ற பச்சை குத்தும் திருவிழா!!