×

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் 3 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், அங்கு திறக்கக்கூடிய நீர் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி-க்கு வந்து கொண்டிருக்கிறது. தற்போது கே.ஆர்.பி அணை அதன் முழு கொள்ளளவான 42 அடியை எட்டிய நிலையில் அணைக்கு வரக்கூடிய உபரி நீராக இருக்கக்கூடிய 2200 கனஅடி நீர் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. இதன் காரணமாக கே.ஆர்.பி அணையின் கீழ்பகுதியில் இருக்கக்கூடிய தரைப்பாலத்திற்கு மேல் தற்போது 2 அடி உயரத்திற்கு தண்ணீரானது வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஆற்று படுக்கையில் இறங்குவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் கரையோரங்களில் முள் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தென்பெண்ணை ஆறு கடந்து செல்லக்கூடிய தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆற்றில் குளிக்க கூடாது, கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது குறிப்பாக ஆற்றை கடந்து செல்ல கூடாது, குழந்தைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்து கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் பிரபாகரன் அறிவுறுத்தியுள்ளார். தற்போது இந்த பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். தொடர்ந்து, மழையானது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வருகிறது. இதனால் மேலும் கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Coconut water, flood, 3 districts, flood hazards
× RELATED நீதிமன்ற முத்திரைத்தாளில் பிரமாணப்...