×

சீன அதிபர் ஜி ஜின் பிங்க் மற்றும் பிரதமர் மோடி வருகையை அடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை: பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார் குவிப்பு

மாமல்லபுரம்: சீன அதிபர் ஜி ஜின் பிங்க் அரசு முறை பயணமாக வருகிற 11-ம் தேதி சென்னை வருகிறார். அன்று பிற்பகல் விமானத்தில் வந்து இறங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கும் சீன அதிபர் மறுநாள் மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகிறது. மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபரும் உலக புகழ்பெற்ற சுற்றுலா இடங்களான அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோவில், வெண்ணெய் உருண்டை பாறை ஆகியவற்றை பார்வையிடுகிறார்கள். இருவரும் நடந்து சென்றபடியே உரையாடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கொரியன் புல்வெளி அமைக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மாமல்லபுரம் முழுவதும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாகவும் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் நுழைவதற்கு இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் பொன்னையா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி இன்று காலையில் இருந்து சுற்றுலா பயணிகள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இது தொடர்பாக கலெக்டர் பொன்னையா கூறும்போது, சீன அதிபரும், பிரதமரும் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் முடிவடைந்த பின்னர் வழக்கம் போல மீண்டும் சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தை சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றார். இதன் மூலம் இன்று முதல் வருகிற 12-ம் தேதி வரையில் 5 நாட்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின் பிங்க் முதலில் மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் தங்குவதாகவே இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் தங்கும் இடத்தில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது. சீன அதிபருடன் அந்நாட்டின் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் 150 பேர் வரையில் வருகிறார்கள். இவர்கள் அனைவரும் தங்குவதற்கு சென்னை கிண்டியில் உள்ள கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலே வசதியாக இருக்கும் என்று பாதுகாப்பு அதிகாரிகள் கருதினார்கள். இதையடுத்தே அந்த ஓட்டல் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஒருவாரத்துக்கு மேலாக ஓட்டலில் சீன பாதுகாப்பு அதிகாரிகளும், சென்னை போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். சென்னை மாநகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிண்டியில் இருந்து 12-ம் தேதி காலையில் சீன அதிபர் ஜி ஜின் பிங்க் காரிலேயே மாமல்லபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு பிறகு காரிலேயே சென்னை திரும்பும் அவர் அன்று மாலையிலேயே சீனாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் 55 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இவ்வளவு தூரத்தையும் சீன அதிபர் காரிலேயே கடந்து செல்ல வேண்டி இருப்பதால் போலீசார் மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட்டு வருகிறார்கள். விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரையில் அங்குலம் அங்குலமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ஒரு இன்ஸ்பெக்டர் வீதம் 55 இன்ஸ்பெக்டர்கள் வழிநெடுகிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 3 கிலோ மீட்டருக்கு ஒரு உதவி கமி‌ஷனர், 9 கிலோ மீட்டருக்கு ஒரு துணை கமி‌ஷனர் என பாதுகாப்பு பணிகள் தனித்தனியாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. வடசென்னை கூடுதல் கமி‌ஷனர் தினகரன் தலைமையிலான போலீசார் சீன அதிபர் காரில் செல்லும் வழிப்பாதைகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். சென்னையில் உள்ள அனைத்து லாட்ஜ்கள், தங்கும் விடுதிகளிலும் போலீசார் இரவு, பகலாக சோதனை நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படையில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் பகலில் 3 ஷிப்டுகளாக பணிபுரிந்து வருகிறார்கள். இரவில் இன்னொரு தனிப்படையினர் தனியாக சோதனை நடத்துகிறார்கள். இந்த சோதனையின்போது லாட்ஜூகளில் தங்கியுள்ள சந்தேக நபர்களை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

சென்னையில் உள்ள லாட்ஜ் உரிமையாளர்களுக்கு இது தொடர்பாக உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடையாள அட்டையின்றி யாருக்கும் அறைகளை ஒதுக்க கூடாது. வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கினால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரம் போலீசார் கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை மற்றும் மாமல்லபுரத்தில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கமி‌ஷனர் ஏ.கே.விசுவநாதன் தலைமையில் கூடுதல் கமி‌ஷனர்கள் பிரேமானந்த் சின்ஹா, தினகரன் மற்றும் உயர் அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பாக அடிக்கடி கூட்டங்கள் நடத்தி போலீசாருக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள். வெளிமாவட்டங்களில் இருந்தும் உயர் அதிகாரிகள் பாதுகாப்புக்காக சென்னை வந்துள்ளனர். பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் வருவதால் சென்னை மற்றும் மாமல்லபுரம் பகுதிகள் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சீன அதிபர் வருகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் நாளையும், நாளை மறுநாளும் போலீசாரின் கெடுபிடி மேலும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : President ,Chinese ,Mamallapuram ,Modi ,Modi Tourists , Tourists, Mamallapuram , Chinese President, Xi Jin Pink, Prime Minister Modi
× RELATED வதந்திகள் மூலம் சர்வதேச அரங்கில்...