ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்க தீவிரக் கண்காணிப்பு : போக்குவரத்துத்துறை செயலாளர் தகவல்

சென்னை: தீபாவளிக்கு ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் சார்பில் உலக விண்வெளி வாரத்தை ஒட்டி சென்னை கோட்டூர் புறத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழக  போக்குவரத்துத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சென்னையில் நிறுத்தப்பட்ட குளிர்சாதன வசதி பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதையடுத்து மின்சார பேருந்துகளை தனியார் மையமாக்க அரசு எந்த கொள்கை முடிவையும் எடுக்கவில்லை என அவர் விளக்கமளித்தார். மேலும் தீபாவளிக்கு பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறிய போக்குவரத்துத்துறை செயலாளர், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Tags : Transport Secretary ,Omni , Omni Bus, Charges, Collecting, Monitoring, Transport Secretary
× RELATED சிறார் ஆபாச படம் பார்ப்போர் பட்டியல்