×

மது, மாது, சூதாட்டம் பேச்சிப்பாறை காட்டில் அத்துமீறல்: சமூக விரோத கும்பலுக்கு வனத்துறை, காவல்துறை உடந்தை?

குலசேகரம்: குமரி மாவட்டம் பரப்பளவில் குறைந்தது, இயற்கை வளம் நிறைந்தது. ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 130 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குமரி மாவட்டத்தில் 30.2 சதவிகிதம் வனப்பகுதியாக உள்ளது. காடுகளும், மலைகளும் அடர்ந்து இருப்பதால் அதிகமழை பொழிவை பெற்று வளம்மிக்க பகுதியாக உள்ளது. பேச்சிப்பாறை அணை பகுதியை சுற்றியுள்ள பகுதிகள் கோதையாறு போன்றவை ரம்மியமான காட்டு பகுதிகளாக இருக்கிறது. இந்த பகுதிகளுக்கு சென்று இயற்கை சூழலை அனுபவிப்பதற்கு அனைவரும் விரும்புவர். இந்த பகுதிகளுக்கு நாளுக்கு நாள் மக்கள் செல்வது அதிகரித்ததையடுத்து தற்போது சூழியல் சுற்றுலாதலமாக அறிவிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

பேச்சிப்பாறை அணையை சுற்றிலும் உள்ள பகுதிகள், அணையிலுள்ள தீவுகள் போன்றவற்றில் எல்லை மீறும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. பேச்சிப்பாறை அணை பகுதிக்கு வரும் பயணிகள், காதல் ஜோடிகள், குடிமகன்கள் போன்றவர்களை பணத்திற்கு ஆசைபட்டு படகோட்டிகள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி படகில் ஏற்றிகொண்டு அணையிலுள்ள தீவு கூட்டங்கள், காட்டு பகுதிகளில் இறக்கிவிடுகின்றனர். இதனால் விரும்பதகாத சம்பவங்கள் நடைபெறுவதோடு காட்டுப்பகுதிகளில் வீசியெறியப்படும் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து காணப்படுகிறது. காடுகளுக்கும், விலங்குகளுக்கும் அழிவை உருவாக்கும்  இதனை யாரும் கண்டு கொள்வதில்லை. பேச்சிப்பாறை அணையின் கரையோர பகுதிகளில் பைக்குகள், வாகனங்களில் யாரும் உள்ளே புகுந்து செல்ல முடியாத வண்ணம் வனத்துறையினர் பாதைகளில் பள்ளம் ஏற்படுத்தி காட்டுபகுதிக்குள் அன்னியர் நுழைவதை தடுத்து வந்தனர். இதனால் சமீபகாலமாக அன்னியர்கள் வாகனங்கள் புகுவது கட்டுபடுத்தப்பட்டிருந்தது.

தற்போது சீறோபாயின்ட் பகுதியை ஒட்டியுள்ள அணையின் கரையோர வனப்பகுதியில் தார்பாய் மூலம் டெண்ட் ஏற்படுத்தி சில கும்பல்கள் கொட்டம் அடித்து வருகிறது. வெளி இடங்களில் ரவுடிதனத்தில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கிவர்கள், கஞ்சா கும்பல்கள் போன்றவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள காட்டுபகுதியை பயன்படுத்தி கொள்கின்றனர். டெண்ட் போடப்பட்டுள்ள பகுதிகளில் சூதாட்டத்திற்கான சீட்டு, கட்டுகள், காலியான மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் சிதறி காணப்படுகிறது. டெண்ட்க்கு உள்ளே பாய், படுக்கை விரிப்புகள், தலையணை போன்றவை உள்ளது. இரவு, பகல் பாராமல் பைக்குகள் மற்றும் கார்களில் இந்த கும்பல்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கிறது. காட்டுபகுதிகளில் மறைவிடங்களில் தங்களின் தேவைக்காக சாராயம் காய்ச்சுவதோடு அணையிலிருந்து மீன்களை பிடித்து அங்கேயே சமைக்கின்றனர்.

அவ்வப்போது வெளியூர்களிலிருந்து கார்களில் அழகிகளையும் அழைத்து வந்து ரம்மியமான இயற்கை எழில் மிகுந்த காட்டுபகுதியை உல்லாசபுரியாக மாற்றியுள்ளனர். இந்த கும்பல்களின் செயல்கள் வனத்துறை, காவல்துறைக்கு தெரிந்திருந்தும் எவ்வித நடவடிக்கையுமில்லை. காடுகளில் மரங்களின் அடியில் அடுப்புகள் அமைத்து சமையல் செய்வது மற்றும் இரவில் குளிர்காய்வதால் மரங்களின் அடிபகுதி எரிந்த நிலையிலும் உள்ளது.காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும், வனவளத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் சூழியல் உணர்வு மண்டலம் போன்றவற்றை திணித்து மக்களின் வாழ்விடங்களையும், வாழ்வாதாரத்தையும் பறிக்கும் அரசு முதலில் இருப்பதை அழிக்காமல் பாதுகாப்பதோடு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Forest , Alcohol, alcohol, gambling, jungle violation: Forest
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...