×

மைசூருவில் பிரசித்திபெற்ற தசராவிழாவில் இன்று யானைகள் ஊர்வலம்: ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் கலாச்சாரத்தை போற்றும் உலகப் புகழ்பெற்ற தசரா விழாவின் இறுதி நாளான இன்று வரலாற்று சிறப்பு மிக்க யானைகள் ஊர்வலம் மைசூருவில் நடக்கிறது.  இதைக்காண உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். நவராத்திரி விழா நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. கர்நாடகாவில் மைசூரு மாகாணத்தை ஆட்சி செய்த மன்னர்கள் கடந்த 400 ஆண்டுகளுக்கு முன் நவராத்திரி விழாவை தசரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பத்து நாட்கள் சிறப்பாக கொண்டாடி வந்தனர். அந்த பழமையான கலாச்சாரத்தை அழியாமல் காக்கும் வகையி–்ல் மாநில அரசின் சார்பில் தசரா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தசரா விழா கடந்த 29ம் தேதி தொடங்கியது. அன்று காலை 9.40 மணிக்கு சாமுண்டி மலையில் முதல்வர் எடியூரப்பா முன்னிலையில் விழாவை எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பா சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து கடந்த 9 நாட்களாக காலை முதல் நள்ளிரவு வரை பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நாடகம், நாட்டுப்புற பாடல், நடனம், குஸ்தி, திரைப்பட விழா, கருத்தரங்கம் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன.

விழாவின் இறுதி நாளான இன்று விஜயதசமியை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க யானைகள் ஊர்வலம் நடக்கிறது. பகல் 2.15 மணி முதல் 2.58 மணிக்குள் மகர லக்னத்தில் மைசூரு அரண்மனை வளாகத்தில் உள்ள கோடை ஆஞ்சநேயசாமி கோயில் வளாகத்தில் நந்திகொடிக்கு முதல்வர் எடியூரப்பா பூஜை செய்கிறார்.அதை தொடர்ந்து மாலை 4.31 மணிக்கு கும்ப லக்னத்தில் பிரமாண்டமான யானைகள் ஊர்வலத்தை முதல்வர் எடியூரப்பா தொடங்கி வைக்கிறார். சிறப்பு விருந்தினராக மைசூரு மன்னர் யதுவீர கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், அமைச்சர் வி.சோமண்ணா, மைசூரு மாநகர மேயர் புஷ்பலதா ஆகியோர் தொடக்க விழாவில் கலந்துகொள்கிறார்கள்.அர்ஜுனா என்ற யானை மீது சாமுண்டீஸ்வரி தேவியை தங்க சிம்மாசனத்தில் அமர்த்தி ஊர்வலமாக எடுத்து செல்கிறார்கள். ஊர்வலத்தில் அர்ஜுனாவை தொடர்ந்து பத்து யானைகள் அணிவகுத்து செல்கின்றன. பின்னால் குதிரைப்படை, காலாட்படை வீரர்கள் அணிவகுக்கிறார்கள். அதை தொடர்ந்து 30 மாவட்ட நிர்வாகங்கள் உள்பட அரசின் பல துறைகள் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 39 அலங்கார ஊர்திகள் அணிவகுத்து செல்கிறது.

வழியில் மாலை 5.15 மணிக்கு சாமுண்டீஸ்வரி தேவிக்கு முதல்வர் எடியூரப்பா மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி வணங்குகிறார்கள்.தொடர்ந்து இரவு 7 மணிக்கு பண்ணிமண்டபத்தை ஊர்வலம் அடைந்ததும், சட்டபேரவை உறுப்பினர் தன்வீர்சேட் தலைமையில் நடக்கும் விழாவில் முதல்வர் எடியூரப்பா, துணைமுதல்வர்கள் கோவிந்த கார்ஜோள், அஷ்வத் நாராயணா, லட்சுமண் சவதி, மத்திய அமைச்சர்கள் டி.வி.சதானந்தகவுடா, பிரகலாத் ஜோஷி, சுரேஷ்அங்கடி, மாநில அமைச்சர்கள் வி.,சோமண்ணா, சி.டி.ரவி, மேயர் புஷ்பலதா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பரிமளா ஷியாம் ஆகியோர் முன்னிலையில் தீப்பந்த அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் வஜுபாய்ருடாபாய்வாலா பெற்றுக்கொள்கிறார். அதன்பின் போலீஸ் அணிவகுப்பு நடந்து பாண்டு வாத்திய இசை முழக்கத்துடன் தசரா விழா நிறைவு பெறுகிறது.

விஜயதசமி யானைகள் ஊர்வலத்தை காண லட்சக்கணக்கில் மக்கள் கூடுகிறார்கள். இதில் தசரா விழா தங்க அட்டை பெற்றுள்ளவர்கள் அமருவதற்காக அரண்மனை வளாகத்தில் 22 ஆயிரத்து 400 இருக்கைகள் போட முடிவு செய்து தற்போது கூடுதலாக 3 ஆயிரம் இருக்கைகள் போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர பன்னிமண்டபத்தில் 26 ஆயிரத்து 200 இருக்கைகள் போடப்படுகிறது.மேலும் யானைகள் ஊர்வல பாதுகாப்பு பணியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஊர்வலம் செல்லும் வழியில் அசம்பாவிதம் நடக்காமல் தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுவதுடன், சிசி கேமரா பொருத்தி கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அரசின் சார்பில் நடக்கும் யானை ஊர்வலத்தில் மைசூரு மன்னர் யாதுவீர கிருஷ்ணதத்த சாமராஜ உடையார், அவரது மனைவி திரிஷிகா, மறைந்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாரின் மனைவி பிரமோதாதேவி உள்பட பலர் கலந்துகொள்கிறார்கள். யானை ஊர்வலத்தை முன்னிட்டு மைசூரு மாநகரம் விழா கோலம் பூண்டுள்ளது.


Tags : festival ,Mysuru ,Dasara , Elephants march ,popular Dasara ,festival ,Mysore: Thousands ,tourists flock
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!