×

பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா திடீர் ‘செக்’: 142க்கு ‘144?’

* முன்கூட்டியே தண்ணீர் திறக்க வற்புறுத்தல்
* 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருத்த முயற்சியா?

மதுரை: பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக இரு மாநில பேச்சுவார்த்தையின்போது, 142 அடி வரை எட்டாமல் முன்கூட்டியே தண்ணீரை திறக்கலாம். வெள்ள சேதத்தை தடுக்க புதிய அணை ஆய்வுக்கு சம்மதிக்க வேண்டுமென தமிழகத்திற்கு கேரளா 2 முக்கிய நிபந்தனை விதித்து செக் வைக்க திட்டமிட்டுள்ளது. 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருத்த முயற்சி நடப்பதாகவும் கூறப்படுவதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்படுமென மூத்த பொறியாளர்கள் கருதுகின்றனர்.  தமிழகம் - கேரள மாநில நதி நீர் பிரச்னைகள் குறித்து கடந்த செப். 25ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வர் பினராய் விஜயன் பேச்சுவார்த்தை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அதில் பரம்பிகுளம் - ஆழியாறு, பாண்டியாறு புன்னம்புழா, பெரியாறு அணை விவகாரங்கள் இடம் பெற்றன. இதற்கு இரு மாநில அளவில் சிறப்புக்குழு  அமைத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களாகியும் இன்னும் சிறப்பு குழு அதிகாரபூர்வமாக அமைத்து அறிவிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தையில் என்னென்ன அம்சங்கள் இடம் பெறும் என்ற விவரங்களும் வெளியாகவில்லை. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் வாழ்வாதாரமான பெரியாறு அணை விவகாரம் குறித்த பேச்சுவார்த்தை என்னாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்னை குறித்த பின்னணி வருமாறு: ரியாறு அணை 152 அடி நீர்மட்ட உயரமுடையது. இதில் கேரளாவின் அபாண்டமான புகாரினால் 1979 முதல் 35 ஆண்டுகள் 136 அடி வரை மட்டுமே தேக்க முடிந்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் முதற்கட்டமாக 142 அடி நீர் தேக்கலாம், அடுத்து பேபி அணையை பலப்படுத்தி 152 அடி தேக்கிக் கொள்ளலாம் என 2006 அளித்த தீர்ப்பை கேரளா ஏற்க மறுத்து அந்த மாநில சட்டப்பேரவையில் அணைபாதுகாப்பு சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், 2014ல் மீண்டும் அதே தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்து கேரள சட்டம் செல்லாது என திட்டவட்டமாக தெரிவித்தது.

புது அணை பூச்சாண்டி: இதன் பிறகு பெரியாறு அணை அருகே மஞ்சமலையில் புது அணை கட்ட திட்டமிட்டு ஆய்வு நடத்த மத்திய அரசிடம் 2018ல் கேரளா அனுமதி பெற்றது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அதில், ‘‘தமிழக அரசுடன் பேசி ஒப்புதல் பெற்று ஆய்வு நடத்தலாம்” என அறிவுறுத்தியது, தமிழக அரசு இதுவரை ஒப்புதல் அளிக்காததால், புது அணைக்கான ஆய்வை கேரளா நடத்த முடியவில்லை. பாதையை மூடிய கேரளா: அதே போல் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, அடுத்தக்கட்டமாக 152 அடியாக நீர் மட்டத்தை உயர்த்தும் திட்டத்திற்காக, அணைப்பகுதியில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கு, 5 ஆண்டுகளாக கேரளா முட்டுக்கட்டை போட்டு வருகிறது.  பேபி அணையை பலப்படுத்த  தமிழக அரசு ரூ.8 கோடி ஒதுக்கியும் அந்த பணியை தொடங்க முடியவில்லை. அணை பகுதிக்கு கட்டுமான பொருட்களுடன் லாரிகள் சென்று திரும்ப குமுளியில் இருந்து வண்டிபெரியாறு, வல்லக்கடவு வழியாகத்தான் ரோடு உள்ளது. தற்போது இந்த ரோடு வழியாக லாரிகள் செல்ல கேரளா அனுமதி அளிக்காமல், வன விலங்குகள் செல்லும் பாதை என மூடி வைத்துள்ளது.

அணையில் இருட்டு :  அணை ப்பகுதியில் மின்விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கிறது. மின்கம்பம் வழியாக  மின்சாரம் கொண்டு சென்றால், யானைகள் அதில் சிக்கி உயிரிழக்கிறது. எனவே பூமி வழியாக மின்சாரம் கொண்டு செல்ல நிபந்தனை விதித்ததால், அதற்காக தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கியது. அந்த பணிகளையும் தொடங்க முடியவில்லை. அணை பராமரிப்புக்கு தேக்கடியில் இருந்து படகு மூலம் தமிழக பொறியாளர், ஊழியர்கள் அன்றாடம் சென்று திரும்புவதில் கேரளாவின் கெடுபிடிகளால் அஞ்சும் நிலையே நீடிக்கிறது. அணையின் முழு பாதுகாப்பு கேரள போலீஸ் வசம் உள்ளது. அணை பகுதிக்குள் வெளியாட்கள் அத்துமீறி நுழைவதை தடுக்க, தமிழக அரசு இரும்பு கதவு அமைக்கும் பணியை கேரளா தடுத்து நிறுத்தி விட்டது. இந்த சிக்கல்கள் குறித்து மத்திய நீர்பாசன பொறியாளர் தலைமையிலான கண்காணிப்பு குழுவிடம் தமிழக அரசு முறையிட்டபோது, “இரு மாநிலங்களும் பேசி தீர்த்து கொள்ளலாம்” என்று தெரிவித்து விட்டது.  152 அடி எட்டும் நிலை ஏற்படும் போது நீர் தேங்கும் தேக்கடியில், கேரளா ஆக்கிரமித்து சுற்றுலா வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணியில் உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இத்தனை சிக்கல்கள் நீடிக்கின்றன.

22 முறை நடந்தும்... ஏற்கனவே  இரு மாநிலங்களிடையே 22 முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் தீர்வு ஏற்படாமல் தான் உச்சநீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளித்தது. அதன்படி அடுத்த கட்டத்துக்கு நகர விடாமல் கேரளா தடுத்து வருகிறது. கேரள முதல்வர் பினராய் விஜயன், “தமிழகத்திற்கு தண்ணீர் தான் முக்கியம். 142 அடி தண்ணீர் தேக்கும் உரிமையில் ஆட்சேபனை இல்லை. ஆனால் 142 அடி வரை தேக்கி வைக்கும்போது, கேரளாவுக்கு வெள்ள அபாயம் ஏற்படுகிறது. எனவே முன்கூட்டியே தமிழகம் நோக்கி தண்ணீரை திறந்து வெளியேற்றி கொள்ள வேண்டும். இதன் மூலம் கூடுதலாக தண்ணீர் கிடைக்க வாய்ப்புள்ளது.. இரு மால பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம்” என்று தொடர்ந்து கூறி வருகிறார். இதுவே  கேரளாவின் நிலைப்பாடாக நீடிக்கிறது.கேரளாவில் வெள்ள சேதத்தை தடுக்க தீர்மானித்துள்ள 6 புதிய அணைகளில் பெரியாறும் இடம் பெற்றுள்ளது. இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சிக்குரியது. இதற்கான ஆய்வு நடத்த தமிழக அரசின் ஒப்புதலை பெறாமல் அணையை கட்ட முடியாது. எனவே இந்த இரு முக்கிய நிபந்தனைகளை விதிக்க கேரளா திட்டமிட்டு செக் வைக்ககூடும்.

 இந்த பின்னணியில் இருமாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் சிறப்புக்குழு மூலம் தீர்வு காண்பது சாத்தியமா என்ற கேள்விக்குறி மூத்த பொறியாளர், பாசன விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டால் மகிழ்ச்சி. ஆனால் ஏற்கனவே 22 முறை பேசி, தீராமல் தான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வெள்ள அபாய பூச்சாண்டி காட்டி 142 அடி தேக்கவிடாமல் தடுப்பதும், அடுத்தகட்டமாக 152 அடிக்கு அடியெடுத்து வைக்கவிடாமல் முட்டுக்கட்டை போடும் கேரளாவின் பிடிவாதம் மாறவில்லை. 142 அடி வரை தேக்காமல் முன்கூட்டியே திறந்தால், வைகை அணையில் கூடுதல் நீரை தேக்க முடியாத நிலை ஏற்படும். அதைவிட முக்கியமாக 152 அடி என்ற உரிமை பறிபோய்விடும். 999 ஆண்டு ஒப்பந்தத்தை திருத்த முயற்சிக்கும் கேரளாவின் சூழ்ச்சி வலையில் தமிழகம் வீழ்ந்துவிடக்கூடாது  இவ்வாறு கூறினர்.  கேரளாவின் நிபந்தனைகளை தமிழகம் ஏற்குமா? சிறப்புக்குழு பேச்சுவார்த்தை நடக்குமா என்ற கேள்வி விஸ்வரூபம் எடுக்கிறது.

பேச்சுவார்த்தை குழுவில் விவசாயிகள் கட்டாயம்
பெரியாறு பாசன விவசாய சங்க தலைவர் முருகன் கூறுகையில், ‘‘பெரியாறு அணை தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம். அணை தண்ணீர் பிரச்னையை கேரளா அரசியல்ரீதியாக அணுகாமல், மனிதாபிமான ரீதியில் அணுக வேண்டும். இரு மாநில பேச்சுவார்த்தையில் தமிழகத்திற்கு அனுகூலம் ஏற்பட்டால் மகிழ்ச்சி. பேச்சுவார்த்தையில் தமிழக உரிமை பறிபோய்விடக்கூடாது. பேபி அணையை பலப்படுத்தி 152 அடியாக உயர்த்த சுமுக தீர்வு எப்போது ஏற்படும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனென்றால், 152 அடி இழப்பால் மூன்று போகம் இருபோகமாகி, இருபோகம் ஒரு போகமாகி, ஒருபோகத்திற்கே தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீருக்கு திண்டாட்டம் தீரவில்லை. எனவே தீர்வு காண பேச்சுவார்த்தை குழுவில் பாசன விவசாய பிரதிநிதிகளுக்கு இடமளிப்பது முக்கியமாகும்’’ என்றார்.

புதிய சுரங்கப்பாதை அமைக்க வேண்டும்
மத்திய நதிநீர் இணைப்பு குழு உறுப்பினர் ஏ.சி.காமராஜ் கூறுகையில், ‘‘பெரியாறு அணை புவியீர்ப்பு தன்மைக்கு ஏற்ப கட்டப்பட்டது. எதிர்திசையில் காற்றின் வேகத்தை தடுக்க அணை சுவர் சரிவாக கட்டப்பட்டுள்ளது. 152 அடி தேங்கினாலும் அலைவீசி அணை மீது தண்ணீர் மோதாது. அணை பலமாக இருப்பதை கேரள முதல்வரும் ஒப்புக் கொண்டுள்ளார். எனவே 142 அடியை அடுத்து 152 அடி எட்டுவதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் இரு மாநில பேச்சுவார்த்தை அமைய வேண்டும். அணையில் இருந்து சுரங்கப்பாதை வழியாக 2,100 கனஅடி மட்டுமே வெளியேற்ற முடிகிறது. இதனால் வெள்ள காலங்களில் தண்ணீர் வீணாக வெளியேறி இடுக்கி அணை நோக்கி பாய்கிறது. கேரளாவுடன் நடக்கும் பேச்சுவார்த்தையில் சுரங்கப்பாதையை விரிவாக்கம் செய்து கூடுதலாக நீரை வெளியேற்றலாம். அல்லது புதிதாக இன்னொரு சுரங்க பாதை அமைக்கலாம், இதற்காக கேரளாவுக்கு மின்சாரம் கொடுத்து பேச்சுவார்த்தையில் தீர்வு காணலாம்’’ என்றார்.

136 அடியை தாண்டியதும் கெடுபிடி காட்டும் கேரளா
தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது, ‘‘பேச்சுவார்த்தைக்கு சிறப்புக்குழு இன்னும் அமைக்கப்படவில்லை. இதில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும். பெரியாறு அணை பராமரிப்புக்கு அன்றாடம் படகு மூலம் பொறியாளர், ஊழியர்கள் சென்று திரும்புவார்கள். 142 அடி தேக்கும் நிலை உருவாகும்போது, கேரள கெடுபிடியால் அஞ்சி நடுங்கும் நிலையே நீடிக்கிறது. தற்போது நீர்மட்டம் 125 அடியை தாண்டி இருப்பதால், அடுத்து வடகிழக்கு பருவமழையில் 142 அடி எட்டுவதற்கு வாய்ப்புள்ளது. அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதித்து இருந்தாலும், அதுவரை எட்டாமல் வெள்ள அபாயம் என தண்ணீரை 136 அடி தாண்டியதும் திறந்து வெளியேற்றும்படி கெடுபிடி நடவடிக்கையில் இறங்குவதை கேரளா வாடிக்கையாக கொண்டுள்ளது.  அணை இருளில் மூழ்கி கிடக்கிறது.  எனவே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்பட்டால் நிம்மதி’’ என்றார்.

Tags : Periyar Dam ,Kerala ,Periyaru Dam , Kerala,Sudden Check, Periyaru Dam, 142 , 144?
× RELATED பெரியாறு அணைப்பகுதியில்...