×

குமரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு தேசிய தர சான்றிதழ் கிடைக்குமா?: ஆய்வுக்கான ஏற்பாடுகள் தொடக்கம்

நாகர்கோவில்: தமிழக அரசு அனுப்பி உள்ள தேசிய தர சான்றிதழுக்கான பட்டியலில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையும் இடம் பெற்றுள்ளது. விரைவில் இதற்கான ஆய்வு குழு மருத்துவமனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 110 ஏக்கர் பரப்பளவில் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்போது 35க்கும் மேற்பட்ட பல்வேறு உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. நாள் தோறும் சராசரியாக 2 ஆயிரம் வெளி நோயாளிகள் வருகிறார்கள். 800க்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாக உள்ளனர்.  இந்த மருத்துவக்கல்லூரி தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது. சமீபத்தில் இந்த மருத்துவ கல்லூரியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த மருத்துவக்கல்லூரியில் தற்போது மாணவர்கள் சேர்க்கை 100 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 150 ஆக உயர உள்ளது.

தற்போது இதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தமிழ்நாடு அரசின்  விபத்து மற்றும் அவசரகால சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது. பல்வேறு உயர் தர அறுவை சிகிச்சைகள் இங்கு முடிக்கப்பட்டு உள்ளன. இதை கருத்தில் கொண்டு தற்போது மத்திய அரசின் தேசிய தர சான்றிதழுக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 7  அரசு மருத்துவமனைகள் பரிந்துரை பட்டியலில் உள்ளன. இதில் 6வது இடத்தில் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இடம் பெற்று உள்ளது.  எனவே இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. தேசிய தர சான்றிதழ் பெற என்னென்ன வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது பற்றி முடிவு செய்து அதற்கான பணிகள் நடைபெறும். இந்த பணிகள் முடிவடைந்த பின்,  விரைவில் தேசிய தர நிர்ணய குழு ஆய்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  தேசிய தர சான்றிதழ் கிடைத்தால், சிறப்பு நிதி பெற முடியும். ஒவ்வொரு படுக்கைக்கும் என கணக்கீடு செய்து மத்திய அரசு நிதி உதவி கிடைக்கும்.  அவ்வாறு கிடைக்கும் நிதியில் 70 சதவீதம் வரை மருத்துவமனை பயன்பாட்டுக்கு செலவழிக்க முடியும் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.

Tags : Kumari Government,Medical College , National Certificate,Preparations, Study Begin
× RELATED சித்திரை திருவிழாவில் இன்று மண்டூக...