×

சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த விவரங்களை வழங்கியது சுவிட்சர்லாந்து

* முதலாவது பட்டியல் இந்தியாவுக்கு கிடைத்தது
* கருப்பு பணத்துக்கு எதிராக நடவடிக்கை

புது டெல்லி: சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த பட்டியலை முதன் முதலாக இந்திய அரசிடம் சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது. வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கமாக கருதப்படும் சுவிட்சர்லாந்த் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வரிஏய்ப்பு செய்து கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு கடந்த 2014ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டது.அதன்படி, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுத்தது. அதன் ஒரு பகுதியாக சுவிட்சர்லாந்து நாட்டு உதவியுடன் அந்நாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்வதற்காக அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்கட்ட விவரங்களை இந்திய அரசிடம் பகிர்ந்து கொள்வது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த கடந்த மாதம் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஒரு குழு இந்தியா வந்தது.

இந்த நிலையில் சுவிட்சர்லாந்து அரசு நேற்று சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த விவரங்களை முதன் முறையாக அளித்துள்ளது. அந்த முதலாவது பட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. சுவிஸ்  வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் பெயர், கணக்கு  எண், நிதி பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்கள் அந்த பட்டியலில் உள்ளன. கறுப்புப் பணத்தை தடுக்கும் வகையில்,  இந்தியா, ஸ்விட்சர்லாந்து அரசுகளுக்கு இடையே தாமாக முன்வந்து கணக்கு  விவரங்களை பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தம் கையொப்பம் ஆனபின் இந்திய அரசுக்கு  கிடைத்துள்ள முதல் பட்டியல் இதுவாகும். இரண்டாவது பட்டியல் வரும் 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கிடைக்கும்.சுவிட்சர்லாந்தின் வரி நிர்வாகத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், “இந்தியா உட்பட 75 நாடுகளுடன் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு வங்கி கணக்குகள் மற்றும் பிற தகவல்களை சுவிட்சர்லாந்து அரசு பகிர்ந்து கொண்டுள்ளது. ஆனால் இந்த தகவல்கள் முழுவதும் ரகசியமானவை” என்றார். முதலாவது பட்டியலில் இருக்கும் இந்தியர்களின் பெயர்கள், அவர்கள் செய்யும் தொழில், வங்கி கணக்கு எண், நிதி பரிமாற்ற விவரங்கள், முகவரி, வசிக்கும் இடம், வங்கி கணக்கு இருப்பு, எடுக்கப்பட்ட பணம் உள்ளிட்ட விவரங்கள் பட்டியலில் உள்ளன. ஆனால் அதை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

சுவிட்சர்லாந்து இதுவரை 31 லட்சம் வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை 75 நாடுகளுக்கும் அனுப்பி வைத்துள்ளது.இந்திய அரசு இந்த  விவரங்களை பெற்று இருப்பதன் மூலம், கறுப்பு பணம் தொடர்பான  வழக்குகள், வெளிநாடுகளில் சொத்து வாங்கி குவித்துள்ளவர்கள், கணக்கில்  வராத சொத்துக்கள் வைத்திருப்பவர்கள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க  உதவியாக இருக்கும். இந்த பட்டியலில் பெரும்  தொழிலதிபர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர்  என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Switzerland ,Indians , Switzerland ,details ,Indians holding,Swiss bank account
× RELATED ஆதார், வங்கிக்கணக்கு விவரங்களை...