மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் பிரதமர் நரேந்திர மோடி 9 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார்: சந்திரகாந்த் பாட்டீல் தகவல்

புனே: மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணியை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடியும் பா.ஜனதா தேசிய தலைவர் அமித் ஷாவும் பிரசாரம் செய்யவிருக்கிறார்கள். பிரதமர் மோடி மொத்தம் 9 பொதுக்கூட்டங்களில் பேசவிருக்கிறார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகள் அக்டோபர் 24ம் தேதி எண்ணப்படுகின்றன. இந்த நிலையில் நேற்று புனேயில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், வரும் நாட்களில் பிரதமர் மோடி 9 பொதுக்கூட்டங்களிலும் அமித் ஷா 18 பொதுக்கூட்டங்களிலும் பேசவிருப்பதாக தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடி 9 பொதுக்கூட்டங்களில் பேசவிருக்கிறார். அவற்றில் இரண்டு பொதுக்கூட்டங்கள் அக்டோபர் 17ம் தேதி சத்தாரா மற்றும் புனேயில் நடைபெறும். அமித் ஷா பங்கேற்கும் கூட்டங்களில் பெரும்பாலானவை மேற்கு மகாராஷ்டிரா பிராந்தியத்தில் நடைபெறும்.

மோடி மற்றும் அமித் ஷா கலந்து கொள்ளும் கூட்டங்களில் பங்கேற்குமாறு புனே மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் அந்த கட்சிகளின் தொண்டர்களையும் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார். பா.ஜனதா-சிவசேனா கூட்டணியில், இந்திய குடியரசு கட்சி (அதாவலே), ஷிவ் சங்க்ராம் கட்சி, ராஷ்ட்ரீய சமாஜ் பக்‌ஷா மற்றும் ரயாத் கிரந்தி சங்கட்டணா ஆகிய சிறிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சத்தாராவில், சட்டப்பேரவை தேர்தலுடன் சேர்த்து சத்தாரா மக்களவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் பா.ஜனதா சார்பில் முன்னாள் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்தவருமான சத்ரபதி சிவாஜி மகாராஜின் நேரடி வாரிசு, உதயன்ராஜே போசலே போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>